Atlee : உச்சகட்ட டிமாண்டில் அட்லீ... சாதனை படைக்க காத்திருக்கும் கோலிவுட் இயக்குநர்...
Atlee : படைப்பாற்றல் மற்றும் பெரிய அளவில் சர்வதேச தரத்தில் ஒரு ஆக்ஷன் படத்தை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொடுத்தது ஜவான்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லீ பாலிவுட் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ள திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு, தீபிகா படுகோனே, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை சொந்தமாக தயாரித்துள்ளது ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி அன்று வெளியான இப்படம் இந்தியில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று 735 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என கூறப்படுகிறது.
துள்ளலில் பாலிவுட் :
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும், இந்தி திரையுலகில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பையும் பெற்றுள்ளது ஜவான் திரைப்படம். தொடர் தோல்விகளால் சுருண்ட பாலிவுட் திரையுலகுக்கு இப்படம் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'பதான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருந்தது. படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு களைகட்டியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது ஜவான் என கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜவானுக்காக காத்திருப்பு :
அந்த வகையில் சமீபத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் அட்லீ, ஜவான் படம் குறித்து பேசுகையில் "ஜவான் படம் குறித்த யோசனை 2019ம் ஆண்டு தொடங்கியது. அதற்கான ஸ்க்ரிப்டை 2020ல் தயார் செய்தேன். பின்னர் எதிர்பாராத விதமாக கோவிட்டில் சிக்கி கொண்டதால் படம் அப்படியே கிடப்பில் இருந்தது. இப்படத்தில் பல ஸ்டார் நடிகர்கள் மற்றும் ஏராளமான நடிகர்களை கொண்டு இருந்ததால் இந்த பிரமாண்டமான ஆக்ஷன் நிறைந்த ஒரு படத்தை தொடர்வதற்கு நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஜவான் கற்று கொடுத்த பாடம் :
செப்டம்பர் 7ம் தேதி படத்தை நாங்கள் வெளியிட்டோம். ஒவ்வொரு படத்தயாரிப்பாளரும் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். படைப்பாற்றல் மற்றும் பெரிய அளவில் சர்வதேச தரத்தில் ஒரு ஆக்ஷன் படத்தை எப்படி கையாள்வது என்பதை நான் கற்றுக்கொண்டேன். இப்போது, நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்து வருகிறேன், ஜவானில் பணியாற்றியதன் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்" என்றார்.
அட்லீ சாதனை :
பாலிவுட்டில் ஜவான் தனது திறமையை நிரூபித்து முதல் படத்திலேயே ஜாக்பாட் வெற்றி படத்தை கொடுத்து சுமார் 800 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. விரைவில் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஜவான் திரைப்படம் 1000 கோடி கிளப்பில் இணைந்துவிட்டால் இந்த சாதனையை படைத்த முதல் கோலிவுட் இயக்குநர் என பெருமையை அட்லீ பெறுவார். அதனால் அட்லீயின் படத்தில் நடிக்க அடுத்தடுத்து ஹீரோக்கள் தயாராக காத்திருக்கின்றனர். அதனால் அட்லீ டிமாண்ட் எகிறி வருகிறது.