Arun Vijay: "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான்.. ஆனால்" கிரிவலம் வந்த அருண்விஜய் பேட்டி..!
Arun Vijay : விருப்பம் உள்ளவர்கள், மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது தானே. விஜய் வருவது நல்லது தானே.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்கள் பலரால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. அப்படி பல திறமைகளை கொண்டவராக விடாமுயற்சியை கைவிடாது இன்றும் முயன்று வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் அருண் விஜய். அவரின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையில் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'மிஷன் சேப்டர் 1' என்ற படத்திலும் இயக்குநர் பாலாவின் 'வணங்கான்' படத்திலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
திருவண்ணாமலையில் அருண் விஜய் :
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது மனைவி சென்றுள்ளனர். அங்கு பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில் "ஒவ்வொரு முறை அண்ணாமலையாரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மன அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அதனால் இங்கு வந்த அவரை தரிசனம் செய்ய எனக்கு காரணம் எதுவும் தேவையில்லை.
மிஷன் சேப்டர் 1 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால் அதற்காக ஒரு முறை கட்டாயமாக தரிசனம் செய்ய வருவேன் என்றும், கூடிய விரைவில் வணங்கான் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்காக திருவண்ணாமலை வர வேண்டியுள்ளது. சாமி பக்தி நிச்சயம் இளைய தலைமுறையினருக்கு இருக்க வேண்டும்" என்றார்.
விஜய் அரசியல் பிரவேசம்:
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அருண் விஜய் பேசுகையில் "நல்ல விஷயம் தான். ஆனால் அவர் முதலில் அதை அறிவிக்கட்டும். விருப்பம் உள்ளவர்கள், மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் வருவது நல்லது தானே. மக்களும் அதை தானே விருப்பப்படுகிறார்கள். அவர்களை நாம் வரவேற்போம். எனக்கு இப்போதைக்கு நடிப்பு பணிகளும் பொது பணிகளும் நிறைய இருக்கிறது. அதனால் இப்போதைக்கு அரசியல் பயணம் எதுவும் இல்லை" என்றார்.
கலகலப்பாக மாறிய பாலா:
பொதுவாகவே பாலாவின் படம் என்றால் ஒவ்வொரு காட்சியும் மிகவும் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அதற்காக அதிகமாக மெனக்கெடுவார். நடிகர்களையும் படாதபாடு படுத்துவார் என கூறப்படும். ஆனால் பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் 'வணங்கான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பாட் மிகவும் கலகலப்பாக இருப்பதாகவும் வழக்கத்திற்கு மாறாக பாலா அனைவருடனும் சிறிது பேசி யதார்த்தமாக பழகுகிறார் என்றும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 70% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் மீதம் இருக்கும் காட்சிகள் திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 28 நாட்களுக்கு படமாக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. இப்படம் நிச்சயம் அருண் விஜய் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.