HBD Anushka Shetty : ஜக்கம்மா தாயம்மா.. அழகும், திறமையும் குடிகொண்ட அனுஷ்கா ஷெட்டி பிறந்தநாள்..
HBD Anushka Shetty : சிறிதும் பந்தாவோ அல்லது ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக வாழ்ந்து வரும் அனுஷ்கா ஷெட்டியின் 42வது பிறந்தநாள்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திறமையும் அழகும் ஒன்று சேர்ந்த நடிகைகளின் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி. சிறிதும் பந்தாவோ அல்லது ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக வாழ்ந்து வரும் அனுஷ்கா பற்றி பலரும் அறியாத சில ஸ்வாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க...
* ஸ்வீட்டி ஷெட்டி தான் அனுஷ்காவின் இயற்பெயர். ஏராளமான மருத்துவர்களும் பொறியாளர்களும் கொண்ட பட்டதாரி குடும்பத்தை சேர்ந்தவர்.
* அனுஷ்கா ஷெட்டி பெங்களூரில் உள்ள மிகவும் பிரபலமான பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்றவர். தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா போன்ற பாலிவுட் பிரபலங்கள் கூட அந்த கல்லூரியில் படித்தவர்கள்தான்.
* நடிகையாக வேண்டும் என்ற கனவு எல்லாம் அனுஷ்காவுக்கு இருந்தே இல்லையாம். பட்டப்படிப்பு முடித்த பிறகு ஆரம்ப பள்ளி ஒன்றை துவங்கி குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்துள்ளார். யோகாவுக்கு முறையான பயிற்சி எடுத்து கொண்டு யோகா கலை ஆசிரியராக இருந்தவர்.
* இயக்குனர் மெஹர் ரமேஷ் ஒரு முறை யோகா வகுப்பில் அனுஷ்காவை சந்தித்துள்ளார். பின்னர் சூப்பர் படத்திற்காக பூரி ஜெகனிடம் அனுஷ்காவை பரிந்துரைத்துள்ளார். அப்படத்தின் மூலம் நாகர்ஜூனாவின் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
* 'சைஸ் ஜீரோ' படத்தில் உடல் பருமனான பெண்ணாக நடிக்க வேண்டும் என்பதற்காக சுமார் 20 கிலோ வரை தன்னுடைய உடல் எடையை அதிகரித்தவர். எத்தனையோ ஹீரோக்கள் உடல் எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் என இருந்து வந்தாலும் எந்த ஒரு ஹீரோயினும் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* 2018ம் ஆண்டு அனுஷ்கா நடித்த 'பாகமதி' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. யுஎஸ்ஏ பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் டாலர்கள் வசூலித்த முதல் பெண் சார்ந்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனை படைத்தது.
* துளு, கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை சரளமாக பேசக்கூடிய அனுஷ்கா ஷெட்டிக்கு கவிதை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. குறிப்பதாக ஆங்கிலத்தில் கவிதைகள் எழுத அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இயற்கை சீற்றங்கள் குறித்த செய்திகளையும் அது தொடர்பான செய்தித்தாள்களையும் ஒரு ஸ்கிராப் புக் போல சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
* தென்னிந்திய திரையுலகில் உள்ள நடிகைகளில் 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட ஒரே நடிகை அனுஷ்கா ஷெட்டிதான் என்ற பெருமையுடையவர்.
* ஜாதகம், ஜோசியம் உள்ளிட்ட காரணங்களால் அனுஷ்காவின் திருமணம் தடை பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் மூன்று ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியான "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி" படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அனுஷ்காவின் நடிப்பில் வெளியான 48 வது திரைப்படமாகும்.