“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் குறித்து பேசியதாகவும், உறவில் தான் தொடர்ந்து பயத்துடன் இருந்ததாகவும் அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் உறவில் தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, உறவின் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட கட்டுப்பாடுகள், நிச்சயதார்த்தம் தொடர்பான அழுத்தம் மற்றும் அந்த உறவில் தான் எப்போதும் பயத்துடன் இருந்தது குறித்தும் அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேச்சு
“முதல் சில சந்திப்புகளுக்குப் பிறகே அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். குடும்பத்தினரை சந்திப்பீர்கள். அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுவீர்கள். மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசுவார்கள். எங்கே நிச்சயதார்த்தம் நடத்தலாம், எத்தனை பேர் வர வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்க ஆரம்பிப்பார்கள்.
மூன்று மாத உறவில் இது இவ்வளவு வேகமாக நடக்க முடியாது. நான் நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து நிறுத்திக்கொண்டே இருந்தேன். ‘இப்போது வேண்டாம், இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்வோம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இது காதலால் நடக்கவில்லை. ஒருவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அவசரம் என்பதை நான் புரிந்துகொண்டேன்” என்று அனுபமா தெரிவித்துள்ளார்.
“துணையின் அருகில் இருக்கும்போது நிம்மதியாக இருக்க வேண்டும்”
தனது மனநிலை குறித்து பேசிய அனுபமா, “உங்கள் துணையின் அருகில் இருக்கும்போது நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். ஆனால் நான் எப்போதும் பயத்திலேயே இருந்தேன். நான் இதைச் சொன்னால் அவருடைய எதிர்வினை என்னவாக இருக்கும்? இதைச் செய்தால் என்ன ஆகும்? என்று மனதுக்குள் ஒவ்வொரு வார்த்தையையும் ஒத்திகை பார்ப்பேன்.
அப்போது நீங்கள் ‘walking on eggshells’ நிலையில் இருப்பீர்கள். ஆரம்பத்திலேயே இப்படியொரு பயம் இருந்தால் அது மிகவும் பயங்கரமான விஷயம். ஆனால் அந்த நிலைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. எல்லாமே மிகவும் மெதுவாகவும் அமைதியாகவும் நடக்கும்” என்றார்.
“என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியும்”
இந்த உறவில் ஏற்பட்ட தனது மாற்றத்தை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கவனித்ததாகவும் அனுபமா கூறியுள்ளார். “என் குடும்பம், என்னுடைய நெருங்கிய நண்பர்கள், என்னுடன் எப்போதும் இருக்கும் ஊழியர்கள் எல்லோருக்கும் ஆரம்பத்திலிருந்தே இது எனக்கு சரியாக இல்லை என்பது தெரியும். ஏனென்றால் அவர்கள் என்னிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்தார்கள். நான் சுருங்கிக்கொண்டே இருப்பதைப் பார்த்தார்கள்.
ஆரோக்கியமான உறவில் நீங்கள் வளர வேண்டும், மலர வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே நான் அப்படி இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“எப்படி இருக்கிறாய் என்று கேட்டாலே அழுதுவிடுவேன்”
தனது அப்போதைய மனநிலையைப் பற்றி பேசிய அனுபமா, “என்னுடைய ஊழியர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். ஆனால் அவர்கள் என் கண்களைப் பார்த்தாலே நான் உடைந்து அழுதுவிடுவேனோ என்று பயப்படுவேன்.
‘எப்படி இருக்கிறாய்?’ என்பதுதான் அந்த நேரத்தில் என்னிடம் கேட்கக்கூடிய மிகவும் பயங்கரமான கேள்வி. ஏனென்றால் அந்தக் கேள்வி வந்தவுடன் நான் எந்த நேரத்திலும் உடைந்து போய்விடலாம். அதனால் அந்த நபரைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்து, என்னைச் சுற்றியிருந்த குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்தும் பல விஷயங்களை மறைத்தேன்” என்றார்.
“ஒரு நாள் அன்பு, அடுத்த நாள் காயம்”
நார்சிசிஸ்டிக் அப்யூஸை விளக்குவதற்காக தனது அனுபவத்தை உதாரணமாக கூறிய அனுபமா, “ஒரு நாள் அந்த நபர் எனக்கு கிடைத்தது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைப்பீர்கள். இது உண்மையா, கனவா என்று தோன்றும்.
அடுத்த நாள் அதே நபர் உங்களைப் பார்த்துக்கூட திரும்பாமல், உங்களை காயப்படுத்துவார். அதன்பிறகு அடுத்த நாளே மன்னிப்பு கேட்பார். அழுவார், கெஞ்சுவார், மீண்டும் இதை செய்யமாட்டேன் என்று உறுதியளிப்பார். பிறகு மீண்டும் அதே லவ் பாம்பிங் தொடங்கும்.
இந்தச் சுழற்சி மீண்டும் மீண்டும் நடக்கும். ஆரம்பத்தில் அது காதல் போல இருக்கும். பிறகு அந்த நபரை உங்கள் முன்னுரிமையாக மாற்றுவார்கள். நீங்கள் அவர்களை முன்னுரிமையாக மாற்றிய பிறகு அது attachment ஆக மாறும். அதன்பிறகு அது addiction ஆகிவிடும்” என்று கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















