கொரோனா சிகிச்சையில் பாடகர் லதா மங்கேஷ்கர்.. சிகிச்சைக்காக மொத்த சேமிப்பையும் வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்!
மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சத்யவான் கீதே என்பவர் தன்னிடம் உள்ள மொத்த பணத்தையும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடகர் லதா மங்கேஷ்கரின் சிகிச்சைக்காக வழங்கியுள்ளார்.
இந்திய சினிமாவில் மிக முக்கிய பாடகரான லதா மங்கேஷ்கர் கடந்த 10 நாள்களாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாகவும், நிமோனியா நோய் காரணமாகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் தற்போது மருத்துவமனையில் ஐசியூ அறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய இன்னிசைக் குரலால் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கட்டிப் போட்டிருப்பவர் லதா மங்கேஷ்கர். அவர் சிகிச்சை முடிந்து, நலமாக வீடு திரும்ப வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகையில், மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சத்யவான் கீதே என்பவர் தன்னிடம் உள்ள மொத்த பணத்தையும் லதா மங்கேஷ்கரின் சிகிச்சைக்காக வழங்கியுள்ளார்.
தன்னுடைய ஆட்டோ முழுவதையும் பாடகர் லதா மங்கேஷ்கரின் பிரபல பாடல்களின் வரிகளையும், லதா மங்கேஷ்கரின் பெரிய படத்தையும் வரைந்து அலங்கரித்துள்ளார் இந்த ஆட்டோ ஓட்டுநர். மேலும், லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது முதல் தொடர்ந்து அவரது நலனுக்காகப் பிரார்த்தனையும் செய்து வருகிறார் சத்யவான் கீதே.
பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல்நலம் குறித்த செய்தி வெளியானவுடன், உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களும், பாலிவுட்டைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் லதா மங்கேஷ்கர் நலமுடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் எனத் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல்நலம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த மகாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே, `லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் உள்ள மூத்த மருத்துவர்களிடம் இதுகுறித்து பேசியுள்ளேன். மேலும் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் லதா மங்கேஷ்கரின் உடல்நலம் குறித்த தகவல்களை உடனுக்குடன் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளேன். மக்கள் அவரின் உடல்நலன் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவின் மிக முக்கிய பாடகர்களுள் ஒருவராகக் கருதப்படும் லதா மங்கேஷ்கர், 1942ஆம் ஆண்டு தன்னுடைய 13வது வயதில் பாடல்களைப் பாடத் தொடங்கினார். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களைப் பாடியுள்ள லதா மங்கேஷ்கர், 3 தேசிய திரைப்பட விருதுகள், 15 வங்காளத் திரைப்பட இதழியலாளர்கள் சங்க விருதுகள், 4 ஃபிலிம்ஃபேர் சிறந்த பெண் பாடகர் விருதுகள், 2 ஃபிலிம்ஃபேர் ஸ்பெஷல் விருதுகள், ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றுள்ளார்.