“அல்லுவுடன் எப்போது ஆலு என்று குடும்பத்தினர் நச்சரிக்கின்றனர்” - விருப்பம் தெரிவித்த ஆலியா பட்
அல்லு அர்ஜூனுடன் நடிக்க வேண்டும் என புஷ்பா படத்தைப் பார்த்துவிட்டு பாலிவுட் நடிகை ஆலியா பட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூனுடன் நடிக்க வேண்டும் என புஷ்பா படத்தைப் பார்த்துவிட்டு பாலிவுட் நடிகை ஆலியா பட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் சுகுமார் இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபஹத் வில்லனாக நடித்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தன. குறிப்பாக சமந்தாவின் முதல் ஐட்டம் சாங்கான ஓ சொல்றியா பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக ஓ சொல்றியா பாடல் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக கூறி ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் அமைப்பு ஒன்று வழக்குத் தொடுத்தது. ஓ சொல்றியா பாடலைப் போலவே ‘ சாமி சாமி’ பாடலும், படத்தின் பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், அல்லு அர்ஜூனுடன் நடிக்க வேண்டும் என புஷ்பா படத்தைப் பார்த்துவிட்டு பாலிவுட் நடிகை ஆலியா பட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆலியா பட் கூறுகையில், ”எனது மொத்தக் குடும்பமும் புஷ்பா படத்தைப் பார்த்துவிட்டது. இப்போது வீட்டில் அனைவரும் அல்லு அர்ஜூனின் ரசிகர்களாகிவிட்டனர். இப்போது எல்லோரும் நான் எப்போது அல்லு அர்ஜூனுடன் நடிப்பேன் என்று கேட்டு நச்சரிக்கின்றனர். என்னை வீட்டில் எல்லோரும் எப்போதும் செல்லமாக ஆலு என அழைப்பார்கள். அல்லு அர்ஜூனை மக்கள் செல்லமாக அல்லு என அழைக்கின்றனர். இதனைக் கோர்த்து என் வீட்டார் ஆலு நீ எப்ப அல்லுவுடன் நடிப்பாய் என்று கேட்கின்றனர். ஒருவேளை எனக்கு அல்லு அர்ஜூனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் ரொம்பவே மகிழ்ச்சியாக அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. புஷ்பா தி ரைஸ் முதல் பாகத்திற்குக் கிடைத்த அமோக வெற்றியால் புஷ்பா 2 மீதான எதிர்பார்ப்பும் விநியோகஸ்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அண்மையில் ஒரு திரைப்பட விழாவில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, புஷ்பா 2 இன்னும் அமோகமாக இருக்கும் என்று ஹின்ட் கொடுத்தார். அவர் பல மேடைகளிலும் புஷ்பா 2 பற்றி பேசி வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரமும் சிறந்த நடிகையுமான ஆலியா பட், அல்லு அர்ஜூனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனால், புஷ்பா 2 வில் ஆலியா பட் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.