“எனக்கு எல்லாமே இந்தியாதான்..” கனடா குடியுரிமையை துறக்கிறார் அக்ஷய் குமார்
பாலிவுட் பிரபலமான அக்ஷய் குமார் கனடா நாட்டு குடியுரிமையையும் கொண்டிருந்தார். இதனால் பல நேரங்களில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் கனடா நாட்டு குடியுரிமையை துறந்துள்ளார்.
பாலிவுட் பிரபலமான அக்ஷய் குமார் கனடா நாட்டு குடியுரிமையையும் கொண்டிருந்தார். இதனால் பல நேரங்களில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் கனடா நாட்டு குடியுரிமையை துறந்துள்ளார்.
ஆஜ் தக் தொலைக்காட்சியின் சீதி பாத் என்ற நிகழ்ச்சியின் புதிய சீசனின் முதல் எபிசோடில் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். அதில் அவர், "நான் கனடா நாட்டு குடியுரிமையை துறந்துவிட்டேன். அந்த குடியுரிமையைக் கொண்டிருந்ததற்காக என்னைப் பலரும் பலவிதமாக விமர்சித்திருக்கின்றனர். அந்த விமர்சனங்கள் என்னை வேதனைப்படுத்தின. உண்மையில் இந்தியா தான் எனக்கு எல்லாம். நான் என்னெல்லாம் சம்பாதித்தேனோ அது இங்கிருந்தே சம்பாதித்தேன். நான் அடைந்த பலன்கள் எல்லாம் இங்கிருந்தே பெற்றேன். அதனால் நான் மகிழ்ச்சியுடன் கனடா குடியுரிமையை துறந்தேன். என் படங்கள் தோற்றபோது நான் ஏதாவது வேலை செய்ய நினைத்தேன். எனக்கு கனடாவில் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் அங்கே வருமாறு அழைத்தனர். அதற்காக நான் அந்நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்து அங்கு சென்றேன். அதன் பின்னர் இங்கே எனக்கு மீண்டும் மார்க்கெட் வந்தது. நல்ல சூப்பர் ஹிட் படங்கள் கொடுக்கிறேன். இந்த வேளையில் நான் என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருந்ததையே மறந்துவிட்டேன். இப்போது அதை துறந்துள்ளேன். ஆனால் நம்மைப் பற்றி புரிந்து கொள்ளாமல் மக்கள் சில நேரங்களில் ஏதேதோ பேசிவிடுகின்றனர். அதனால் மனதிற்கு மிகுந்த சங்கடம் உருவாகிவிடுகிறது" என்றார்.
ஹீரா பேரி, நமஸ்தே லண்டன், டாய்லட்: ஏக் பிரேம் கதா, பேட்மேன் எனப் பல்வேறு படங்களால் அவர் அறியப்படுகிறார். 1990களில் அவர் தொடர்ச்சியாக 15 ஃப்ளாப் படங்களைக் கொடுக்க நேர்ந்தது. அந்த மன உளைச்சலில் அவர் கனடா நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார். கனடாவில் செட்டில் ஆகவும் முடிவு செய்திருந்தார். ஆனால் அண்மைக் காலமாக அவர் பாலிவுட்டில் மீண்டும் மிளிர்ந்து வருகிறார். இதனால் அவரது கனடா குடியுரிமை விவகாரம் மீண்டும் பேசு பொருளானது. இந்நிலையில் அவர் கனடா குடியுரிமையை துறந்துள்ளார்.
அக்ஷ்ய குமார் சமீப காலமாக பாஜகவுடன் நெருக்கமாக உள்ளார். 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர் அவர் பிரதமர் நரேந்திர மோடியை எடுத்த பேட்டி பிரபலமடைந்தது. ஸ்வச் பாரத் திட்டத்தை முன்னிறுத்தி அவர் டாய்லெட் என்ற படத்தை எடுத்தார்.
சூரரைப் போற்று ரீமேக்கில் அக்ஷய்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான படம் ’சூரரைப் போற்று‘. பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து, இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதற்காக அக்ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
அதுதவிர மனுசி சில்லார், சோனு சூட் மற்றும் சஞ்சய் தத்துடன் இணைந்து அவர் நடித்து வரும் பிருத்விராஜ் படத்துக்காகத் தயாராகி வருகிறார்.