Good Bad Ugly: தொடரும் ஹவுஸ்ஃபுல்! காட்சிக்கு காட்சி எகிறும் கலெக்ஷன்! குட் பேட் அக்லி அட்டகாசம்!
Good Bad Ugly: அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் உலகெங்கும் நேற்று முன்தினம் வெளியானது.
குட் பேட் அக்லி:
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த படம் வெளியாகி இருப்பதால் படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. கடந்த 10 வருடங்களில் அஜித்குமார் இதுபோன்ற திரைப்படத்தில் நடித்தது இல்லை என்றே கூறலாம்.
இதனால், அடுத்தடுத்த நாட்களுக்கும் இந்த படத்திற்கு தொடர்ந்து திரையரங்குகளுக்கு காட்சிகள் புக்கிங் பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. வியாழக்கிழமை முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் 31 கோடி ரூபாயை வசூல் குவித்த நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்றும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
ஹவுஸ்ஃபுல் காட்சிகள்:
வரும் திங்கள் கிழமை தமிழ் புத்தாண்டு என்பதால் நேற்று இரவு முதல் வரும் குட் பேட் அக்லி படத்திற்கான டிக்கெட் விற்பனைகள் படுஜோராக நடந்து தீர்ந்து விட்டது. இதனால், வரும் திங்கள் கிழமை வரை அஜித் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.
அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் இதற்கு முந்தைய அஜித் படங்களை காட்டிலும் அதிகளவு வசூல் ஈட்டும் என்றே விமர்சகர்கள் கணித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வெளிநாடுகளிலும் குட் பேட் அக்லி படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். சுனில், பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் நடித்துள்ளனர். அர்ஜுன்தாஸ் வில்லனாக நடித்துள்ளார். சிம்ரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சாதாரண கதையாக இருந்தாலும் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய வலுவான திரைக்கதை மூலமாக இந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றியுள்ளார். வேலை நாட்களிலும் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் குறையாமல் வந்தால் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

