இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கியுள்ள 'மைலாஞ்சி' படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு
இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

'மைலாஞ்சி' படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மைலாஞ்சி' திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' திரைப்படத்தில் 'கன்னி மாடம்' பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உன்னதமான காதல் உணர்வை போற்றும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் ப. அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.
திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டீசரை வெளியிடுவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் திருமதி அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மிஷ்கின், மீரா கதிரவன், தயாரிப்பாளர் தனஞ்செயன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் 'மைலாஞ்சி' பாடல்களை வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ப. அர்ஜுன் பேசுகையில் : "இது நெகிழ்ச்சியான மேடை. உலகம் பெரியது, ஆனால் என்னுடைய உலகம் மிக சிறியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறேன். அன்னை இல்லம் என்ற ஒரு கூட்டு இல்லம் தான் என்னுடைய உலகம். எனக்கு வெளி உலகம் தெரியாது. நோய்களைப் பற்றி, அதுவும் மனநலம் சார்ந்த நோய்களைப் பற்றியும் நோயாளிகள் குறித்தும் கண்டறிந்த நான் இந்த வெளி உலகத்தை பார்க்கவில்லை.
சினிமா தயாரிக்க போகிறேன் என்று சொன்னவுடன் என்னுடைய உறவுகளும் நண்பர்களும் பதட்டம் அடைந்தனர். வியப்பாகவும் பார்த்தனர், சிலர் வருத்தமும் அடைந்தனர். ஆனால் 'மைலாஞ்சி' திரைப்படம் எனக்கு ஏராளமான அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது. அனுபவ பாடங்களில் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தீயவற்றை விட்டு விடுங்கள். அடுத்த நாள் காலையில் நாம் இருப்போமா என்று உறுதியாக தெரியாது. மனித வாழ்க்கை நிலைத்தன்மை அற்றது.
கதை சொல்வதற்காக என்னுடைய ஹீரோ, இயக்குநர் அஜயன் பாலாவை எனக்கு அறிமுகப்படுத்துகிறார். நான்கு கதைகளை அவர் சொல்கிறார், அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கதைக்கும் எதிர்வினை ஆற்றாததால் ஹீரோவும், இயக்குநரும் என்னை பார்த்துக் கொண்டே இருந்தனர். நான் அடிப்படையில் மனநல மருத்துவன் என்பதால் எதிர்வினை ஆற்றாமல் இருப்பது என்னுடைய பழக்கமாகிவிட்டது. அதன் பிறகு அவர்களிடம் வேறு ஏதேனும் கதை இருக்கிறதா எனக் கேட்டேன்.
இயக்குநர்களில் பீம்சிங், ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்டவர்களை எனக்கு பிடிக்கும். இவர்கள் மனித உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகம் என்பதை கடந்து அதற்குள் மனித உணர்வுகளை கடத்தக்கூடிய அளவிற்கு கதையை சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டேன்.
அதன் பிறகு ஐந்தே நிமிடத்தில் ஒரு கதையை சொன்னார். அந்த கதை தான் 'மைலாஞ்சி'. உணர்வுகள் எதுவும் புதிதில்லை, எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். இந்த பூமி அழியும் வரை காதல் ஒரு உன்னதமான நெகிழ்வான ஒரு உணர்வு. காதல் எனும் உணர்வு பழையதாக இருந்தாலும், அதை கொடுக்கும் விதம் புதிதாக இருக்க வேண்டும்.
இந்தத் திரைப்படம் எனக்கு நட்பை கற்றுக் கொடுத்திருக்கிறது. நட்பிற்குரிய மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டிருக்கிறது என்று நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அது இல்லை என்பதை இந்த படத்தில் நான் கற்றுக் கொண்டேன். நட்பின் காரணமாக ஒளிப்பதிவாளர் செழியன் இந்த குழுவுடன் இணைந்தார்.
காதல் என்ற உணர்வை மென்மையாக சொல்லக்கூடிய இந்த கதைக்கு இசைஞானி இளையராஜா தான் வேண்டும் என கேட்டேன். செழியனின் நட்பிற்காக இளையராஜா இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். செழியனின் நட்பிற்காக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இந்த குழுவுடன் இணைந்தார். வெற்றிமாறன் இந்தப் படத்தை வழங்குவதற்கும் நட்புதான் காரணம். மிஷ்கின் அவர்களும் நட்பின் காரணமாகவே இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கிறார். அண்ணன் சீமானுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாகவே அவரும் இங்கு வருகை தந்திருக்கிறார். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாத என்னுடைய பால்ய கால வகுப்புத் தோழர் ஏடிஜிபி தினகரனையும் மற்றும் நட்பின் காரணமாக இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காதல் தற்போது வேறு விதமாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில், காதல் வேறுவிதமானதல்ல, காதல் என்றைக்கும் காதல் தான், உண்மையான காதல் என்பது எப்போதும் காதலாகவே இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்காகவே மைலாஞ்சியை உருவாக்கி இருக்கிறோம். இதனை இந்த இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்," என்றார்.
ஒளிப்பதிவாளர் செழியன் பேசுகையில் : "அஜயன் பாலா எனக்கு நண்பன். 2000ம் ஆண்டில் நான் பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக பணியாற்றியபோது, அஜயன் பாலா மற்றொரு இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றிய போது நண்பர்களாக அறிமுகமானோம். அப்போது நடைபெற்ற உரையாடலில், 'நான் முதலில் படத்தை இயக்கினால் அதற்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்' என என்னிடம் கேட்டுக் கொண்டார். கேட்டுக் கொண்டதுடன் மட்டும் இல்லாமல் அவருடைய பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, ' இதுதான் உனக்கான அட்வான்ஸ்' என்றார். அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு நாள் திடீரென்று அலுவலகத்திற்கு வந்து படத்தில் பணியாற்ற சம்மதமா எனக் கேட்டார். அப்போது அவரிடம், 'நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. வா படப்பிடிப்புக்கு செல்லலாம்' என்றேன்.
ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும்போது யாரேனும் இருவர் எனக்கு நெருக்கமான நண்பர்களாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் இந்த படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக் எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். இந்த படத்திற்காக தன்னுடைய முழு உழைப்பையும் வழங்கி இருக்கிறார். தமிழில் முக்கியமான நடிகராக அவர் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் அர்ஜுன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி, அவரும் நெருக்கமான நண்பராக மாறிவிட்டார்.
ஊட்டி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாலுமகேந்திரா தான். அவர் காட்சிப்படுத்தாத லொகேஷன்களை தேடித் தேடி இந்த படத்திற்காக பதிவு செய்திருக்கிறோம். இருபது ஆண்டுகள் கழித்து கலர்ஃபுல்லாக க்ளாஸியாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை அளித்த நண்பர் அஜயன் பாலாவிற்கு நன்றி. நான் பெரிதும் மதிக்கும் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்," என்றார்.
நடிகர் சிங்கம் புலி பேசுகையில் : "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மருத்துவர் அர்ஜுன் எனக்கு மாமா. எனக்கு சொந்த ஊர் சேத்தூர். நாங்கள் கால சூழலில் இடம் மாறி விட்டோம். ஆனால் அதே ஊரில் தான் இருப்பேன் என்று சொல்லி இன்றும் அங்கேயே இருக்கிறார் அர்ஜுன். அவருடைய அப்பா ஒரு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். இவர் படித்து மருத்துவராகி இருக்கிறார்.
இப்போதும் அவர் காசு வாங்காமல் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். அப்பா, அம்மா, பாரதியார், வள்ளுவர், கம்பர்... இதுதான் அவருடைய உலகம். அவர் எந்த ஹோட்டலிலும் சாப்பிட மாட்டார். வெளியிடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். குளிர்சாதன வசதி உள்ள அறையில் அதிக நேரம் இருக்க மாட்டார். தனி மனித ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய குலதெய்வத்தை வணங்குவதற்காக செல்லும்போது இவரை சந்திக்கிறேன். அப்போது என்னிடம் ஒரு படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டுவிட்டு, ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என அவருடைய விருப்பத்தை சொன்னார். அவர் சில கதைகளையும் சொன்னார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அஜயன் பாலா அவரை சந்தித்து கதை சொன்ன போது, அந்த கதை பிடித்து, இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அஜயன் பாலா, செழியன், லால்குடி இளையராஜா, ஸ்ரீகர் பிரசாத், இசைஞானி ஆகியோர் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றால் தயாரிப்பாளர் சினிமாவை எவ்வளவு தூரம் நேசித்திருக்கிறார் என்பது புரியும். சினிமாவைப் பற்றி என்னிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசுவார்," என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில் : "எழுத்தாளர் அஜயன் பாலாவின் பல வருட கனவு இயக்குநராக வேண்டும் என்பது. அது இன்று நனவாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எழுதிய நிறைய புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். அஜயன் பாலா மீதான நட்பின் காரணமாகவே இங்கு அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.
அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சீமான் திரைப்படங்களை பார்வையிட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார். இது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. அதனால் அவரிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன் ஊடகங்களால் நல்ல படைப்புகள் என பாராட்டப்படுவதை நீங்கள் அவசியம் பார்த்து உங்களுடைய கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக உங்களைப் பின்பற்றுபவர்கள் அந்த படத்தை பார்த்து வெற்றி பெறச் செய்வார்கள். அதனால் தொடர்ந்து சிறிய படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், "எட்டு மாதத்திற்கு முன்பு மயிலாஞ்சி என்று ஒரு படம் வந்தது. இது மைலாஞ்சி. நீண்ட நெடிய பயணத்திற்குப் பின் இயக்குநராகி இருக்கும் அஜயன் பாலாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
1976ம் ஆண்டில் கோயம்புத்தூரில் நான் தான் முதல் மாணவன். எனக்கு கோவை மருத்துவக் கல்லூரியிலும், கோவை வேளாண்மை கல்லூரியிலும் படிப்பதற்கான இடம் கிடைத்தது. ஆனால் 4500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அதற்கு என் தந்தையிடம் பணம் இல்லாததால் என்னால் மருத்துவராக முடியவில்லை. இது தொடர்பாக எனது தந்தையிடம் பேசும் போது 'நீ எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆளாக வருவாய்' என்றார். என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். அவரை கம்யூனிஸ்ட்டாக மாற்றியவர் பாவலர் வரதராஜன். அதன் பிறகு அவரிடம் உங்களால் எவ்வளவு கட்டணத்தை கட்ட முடியும் என கேட்டேன். அவர் 150 ரூபாய் என்று சொன்னதால், உடனே அரசு கல்லூரியில் 140 ரூபாய் செலுத்தி தாவரவியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.
அஜயன் பாலாவிற்கு இந்தப் படத்தில் இயக்குநர் வாய்ப்பு அளித்த தயாரிப்பாளரை நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்று விளம்பரப்படுத்தினாலே படங்கள் வியாபாரம் ஆகிவிடும். அந்த அளவிற்கு இந்த திரைத் துறையில் ஆளுமை கொண்டவர் இசைஞானி இளையராஜா. படத்திற்கு என்ன தேவையோ அதனை அவர் சரியாக கொடுத்திருப்பார். அவருக்கு பதிலாக அவருடைய சகோதரர் கங்கை அமரன் இங்கு வருகை தந்திருக்கிறார், அவருக்கும் நன்றி.
இயக்குநர் அஜயன் பாலா எப்போதோ வெற்றி பெற வேண்டியவர். லேட் பட் நெவர். இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி," என்றார்.





















