நான் இந்தப் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன்.. அகிலன் பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயம் ரவி!
”நான் இந்தப் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன்” - ஜெயம் ரவி
ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'அகிலன்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் இன்று (மார்ச்.03) நடைபெற்றது.
நடிகர் ஜெயம் ரவி - என். கல்யாண் கிருஷ்ணன் காம்போ 'பூலோகம்' படத்துக்குப் பிறகு மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் 'அகிலன்'. பிரியா பவானி சங்கர் இந்தப் ப்டத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் ஜெயம் ரவி, நடிகை பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன், இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். மேடையில் பேசியதாவது:
கதைக்களம் எப்போதுமே ஒரு படத்துக்கு ஆதரவு தரும். அதுபோல இந்த படத்துக்கு துறைமுகம் முக்கியமான களம். அங்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறார்கள். நான் இப்போதுதான் இசை கற்றுக்கொண்டு வருகிறேன். உணர்வுப்பூர்வமாக இசையமைக்கிறோம் அவ்வளவுதான்.
வருத்தம் என்னவென்றால் இந்தப் படத்தில் காதல் பாடலே இல்லை. ஜெயம் ரவியை இந்தப் படத்தில் வேறு மாதிரியாக பார்த்தேன். கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். ஜெயம் ரவியுடன் நிறைய படங்கள் வேலை பார்க்க வேண்டும். இந்தப் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து மேடையில் பேசிய இயக்குநர் கல்யாண், “அகிலன் ஜனங்களிடம் நெருங்கும் கதாபாத்திரமாகத்தான் இருக்கும். நடிகர் சிராக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் வசனங்கள் குறைவு... விஷுவல் அதிகம்” என்றார்.
தொடர்ந்து மேடையில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது: “அகிலன் மேக்கிங் படி ஒரு கஷ்டமான படம். அதில் முயற்சித்த என் படக்குழுவுக்கு நன்றி. இந்தப் படம் எடுத்து முடிப்பது சாதாரண விஷயம் அல்ல. இயக்குநர் கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர். இந்தப் படத்தை நாங்கள் பார்த்து விட்டோம். நன்றாக வந்திருக்கிறது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். உடன் சேர்ந்து இன்னும் நிறைய படங்கள் பணியாற்ற வேண்டும் என ஆசை. நான் இந்தப் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஆதரவு தாருங்கள்” என்றார்.
அகிலன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான துரோகம் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வரும் மார்ச் 10ஆம் தேதி அகிலன் படம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.