Dheena - Khushi: சர்ஃப்ரைஸ் கொடுத்த கில்லி: குஷியில் தயாரிப்பாளர்கள்! அடுத்த மூவ் இதுதானாம்!
விஜயின் கில்லி படம் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய பின் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து தங்கள் படங்களை ரீரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகிறார்கள்
கில்லி ரீரிலீஸ்
திரையரங்குகளில் புதுப்படங்கள் வெளியாகாத நேரத்தில் ஏற்கனவே வெளியான சூப்பர் ஹிட் படங்களை மறு வெளியீடு செய்வது வழக்கம். அல்லது எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன் நடித்த கிளாசிக் படங்கள் நினைவுகூறப் படுவதற்காக மறு வெளியீடு செய்யப் படும் . ஆனால் இதுவரை இல்லாத அளவு ரீரிலீஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. தங்கள் சிறுவயதில் பார்த்த படங்களை மீண்டும் திரையில் பார்த்து ரசிக்கிறார்கள் 90ஸ் கிட்ஸ். அதே நேரம் தாங்கள் பிறப்பதற்கு முன்பாக வெளியான படங்களை முதல் முறையாக திரையரங்களில் பார்க்கும் அனுபவத்தை கொண்டாடுகிறார்கள் 2கே கிட்ஸ். இப்படி இரு தரப்பு ரசிகர்களும் சேர்ந்து இப்படி வெளியாகும் படங்களுக்கு வசூலை வாரி வாரி வழங்குகிறார்கள்.
கடந்த ஆண்டு முதல் உச்சத்திற்கு சென்று வருகிறது இந்த ரீரிலீஸ் ட்ரெண்ட் . தனுஷ் நடித்த 3 , ரஜினி நடித்த பாபா, கமல் நடித்த வேட்டையாடு விளையாடு , சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல வருமாணத்தை ஈட்டித் தந்தன. சமீபத்தில் விஜய் நடித்த கில்லி படம் திரையரங்கில் வெளியாகி வசூல் சாதனையே படைத்துவிட்டது. 20 ஆண்டுகளுக்குப் பின் வெளியான கில்லி பாக்ஸ் ஆபிஸில் 20 கோடி வரை வசூல் செய்துள்ளது.
அஜித் பிறந்தநாளன்று வெளியாகும் அஜித் படங்கள்
⭐#Ajithkumar's #Billa & #Dheena Re-Releasing on May 1st ; Book your Tickets Now! 🎟️
— Cine World CW 🌍 (@CWcricworld) April 29, 2024
May 1st Re-Release!🔥
AK's B'day Special!!!💥 pic.twitter.com/PQ7fFDUjoS
தற்போது விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் தயாராக இருக்கிறார்கள். வரும் மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் குமார் நடித்த தீனா , பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் மறு வெளியீடு செய்யப் பட இருக்கின்றன. இந்தப் படங்கள் வழியாக தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
குஷியில் தயாரிப்பாளர்கள்
கில்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தபடியாக விஜய் நடித்த குஷி படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் அப்படத்தின் தயாரிப்பளர்கள் . இனி வரக்கூடிய நாட்களில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் நாட்களைத் தவிர்த்து திரையரங்குகளில் அதிகம் ரீரிலீஸ் படங்களே அதிகம் ஓடும் என்று எதிர்பார்க்கலாம். விஜய் , அஜித் , ரஜினி , படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் தங்கல் பங்கிற்கு எந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யலாம் என்பதில் தீவிர விவாதத்தில் உள்ளார்கள் .