Adipurush: ஆதரவற்றோருக்கு 10 ஆயிரம் இலவச டிக்கெட்... ராம்சரண் அறிவிப்பால் கவலையில் தமிழ்நாட்டு ரசிகர்கள்!
படத்தை ஓட வைக்க ஆதிபுருஷ் படக்குழு தொடர்ந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
ரன்பீர் கபூரை அடுத்து நடிகர் ராம்சரணும் 10ஆயிரம் ஆதிபுருஷ் டிக்கெட்டுகளை வாங்கி தானம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் பிரபாஸ், க்ரித்தி சனோன், நடிகர் சைஃப் அலி கான் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே கடும் ட்ரோல்களை சம்பாதித்து வருகிறது. பிரபாஸ் ராமரைப் போல் அல்ல சீமானைப் போல் இருக்கிறார் என நெட்டிசன்கள் ட்ரோல்களைக் குவிக்க ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இப்படம் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆதிபுருஷ் படக்குழுவினர் மும்மரமாக படப்பிடிப்பு பணிகளை விறுவிறுப்பாக எடுத்துச் சென்ற முடித்தனர். வரும் ஜூன் 16ஆம் தேதி இப்படம் ரிலீசாக உள்ள நிலையில் ராம பக்தரான கடவுள் அனுமனுக்கு அனைத்து திரையரங்குகளிலும் ஒரு சீட் ஒதுக்கப்படும் என ஸ்டண்ட் அறிவிப்பு வெளியிட்டு தற்போது ஆதிபுருஷ் படக்குழு மீண்டும் டாக் ஆஃப் த டவுனாக மாறியுள்ளது.
மேலும் தெலங்கானாவைச் சேர்ந்த அரசு பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க உள்ளதாகவும் இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஓம் ராவத்தைத் தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர் ஆதிபுருஷ் படத்தின் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாக சென்ற வாரம் அறிவிப்பு வெளியானது.
இதே போல் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'கார்த்திகேயா 2' படங்களில் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் முன்னதாக அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, தற்போது நடிகர் ராம்சரணும் 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளை வாங்கி வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தை ஓட வைக்க ஆதிபுருஷ் படக்குழு தொடர்ந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டில் இப்படி டிக்கெட்டுகள் வாங்கித் தர ஒரு ஸ்டார் இல்லையே என்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும், "ஆதிபுருஷ் படத்துக்கு அனுமனுக்கு ஒரு சீட் இல்லை. 10 சீட் கொடுக்கக்கூட ரெடியாகவே உள்ளோம். ஆனால் இந்தப் படம் தமிழ்நாட்டில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருக்கப்போவதில்லை, தியேட்டருக்கு மக்களை வரவழைக்க மதத்தை இழுக்கிறார்கள்” என தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.
சுமார் 700 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி கிராஃபிக் காட்சிகள் ட்ரோல்கலை சம்பாதித்தன.