Adipurush Row: மக்கள் நம்பிக்கைய உடைக்காதீங்க.. ஆதிபுருஷ் படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு...விமர்சித்த காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்!
ஆதிபுருஷ் படத்தின் மீதான தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கியவர் விவேக் அக்னிஹோத்திரி என்பது குறிப்பிடத்தகது.
கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் வெளியான நாள் முதல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற முதிர்ச்சியற்ற வசனங்கள் சில கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படத்தில் ஏதோ பாம்பே கேங்ஸ்டர்கள் பேசுவதுபோல் சில வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் விமர்சித்திருந்தாகள்.
இதனைத் தொடர்ந்து அந்த வசனங்களை நீக்கியது படக்குழு. மேலும் இந்து மத நம்பிக்கையாளர்களை புண்படுத்தியதாக ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது பாலிவுட் பட இயக்குநரான விவேக் அக்னிஹோத்திரி பேட்டி ஒன்றில் ஆதிபுருஷ் படம் குறித்தான தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
விவேக் கூறியதாவது "மக்களின் நம்பிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட ஒன்றை வைத்து படமெடுக்கும்போது ஒருவர் கவனமாக இருப்பது அவசியம். என்னுடைய நம்பிக்கை அவர்களின் நம்பிக்கையுடன் வேறுபடலாம். உதாரணத்திற்கு ஒரு அம்மாவிற்கு தனது குழந்தை மிக அழகானதாக தோன்றலாம்.
ஆனால் அவருடைய குழந்தை அழகானது இல்லை என்று நான் அவருக்கு நிரூபித்து அந்த தாயின் நம்பிக்கையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை மற்றும் அன்பு தொடர்பான விஷயங்களில் லாஜிக் எல்லாம் எடுபடாது. மற்றவர்களின் அன்பையும் நம்பிக்கையும் உடைக்க நினைப்பது ஒரு பாவமான செயல்" எனப் பேசியுள்ளார்.
மேலும் படத்தை வெளியிடுவதற்கு முன்பு சென்ஸார் வாரியம் படத்தைப் பார்த்திருந்தபோதிலும் வசனங்களை நீக்க படாததற்கான காரணத்தை விளக்கிய விவேக் “நான் சென்ஸார் வாரிய குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். நான் படத்தை பார்க்கவில்லை. படத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாத சாதாரண மக்கள்தான் படத்தை பார்த்தார்கள்.
யார் படத்தை பார்த்தது, எந்தக் கட்டத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய கடந்த கால கருத்துக்களை நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரியும். பொதுவாகவே நான் எந்த படத்தைப் பற்றியும் என்னுடைய கருத்துக்களை தெரிவிப்பதில்லை .
நல்ல படமோ கெட்ட படமோ நான் அவற்றை பற்றி எதுவும் பேசுவதில்லை. ஆனால் நம்பிக்கைகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியவை என்பது எனக்குத் தெரியும்.’ என்று கூறியுள்ளார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி.
விவேக் அக்னிஹோத்திரி
தற்போது விவேக் அக்னிஹோத்திரி தான் இயக்கியிருக்கும் த வேக்ஸின் வார் திரைப்படத்தின் ரீலிஸுக்காக காத்திருக்கிறார். நானா படேகர், அனுபம் கெர், ரைமா சென் , சப்தமி கெளடா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். பல்லவி ஜோஷி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்த ஆண்டு தசரா பண்டிகை அன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிடடுள்ளது படக்குழு.