Vichitra : யாருமே ஆதரவு தெரிவிக்கல.. கண்துடைப்பு கமிட்டியாக இருக்க கூடாது - விசித்ரா அதிரடி பேட்டி
Vichitra on Metoo allegations : திரைத்துறையில் தாண்டவமாடும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார் நடிகை விசித்ரா.
![Vichitra : யாருமே ஆதரவு தெரிவிக்கல.. கண்துடைப்பு கமிட்டியாக இருக்க கூடாது - விசித்ரா அதிரடி பேட்டி Actress Vichitra opens up on Metoo allegations and the need for good committee to investigate in this regard Vichitra : யாருமே ஆதரவு தெரிவிக்கல.. கண்துடைப்பு கமிட்டியாக இருக்க கூடாது - விசித்ரா அதிரடி பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/ba141476cc48623a9085cad8a21bad041725030265914224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரளா திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில் அது குறித்து பல நடிகைகள் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகை விசித்ரா அது குறித்து நேர்காணலில் பேசியுள்ளார்.
திரைத்துறையில் இது மிகவும் அதிகமாகேவ இருக்கிறது. இது குறித்து நானே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது வெளிப்படையாக பேசி இருந்தேன். ஆனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நிறைய பேர் ஆதரவு அளித்தனர். பொதுமக்கள் பலரும் எனக்கு ஆதரவாக பேசி இருந்தார்கள்.
உயர் பதவியில் இருக்கும் நிர்வாகிகளோ அல்லது பெரிய நடிகர், நடிகைகளோ யாருமே எனக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால் இரண்டாம் நிலையில் இருக்கும் பெரும்பாலான நடிகர் நடிகைகள் நேரில் வந்து என்னிடம் ஆதரவாக பேசி வருத்தம் தெரிவித்தார்கள். அந்த சமயத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் இந்த பிரச்சினை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது எனக் கூறினார்கள். ஆனால் அந்த சமயத்தில் கூட அதற்கான சரியான விசாரணையோ அல்லது தீர்வோ கிடைக்கவில்லை. அது எனக்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது.
பெண்கள் இப்பொழுது முன்வந்து பேச ஆரம்பிக்கிறார்கள் எனும்போது அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர், நடிகைகள் ஆதரவாக இருக்க வேண்டும். மலையாள திரையுலகில் இப்பொழுது இந்த கமிட்டி மூலம் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் அதுவும் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. ஏராளமான போராட்டத்திற்கு பிறகே இது நடைபெற்றுள்ளது. இதற்கு பின்னால் எவ்வளவு வெளிவராத போராட்டங்கள் இருந்திருக்கும். இப்போது ஒரு சில நடிகைகள் வெளிப்படையாக அவர்களின் பர்சனல் பாதிப்பு குறித்து பேசுகிறார்கள். அவர்களுடைய மனநிலை, பாதுகாப்பு, இனி அவர்கள் எதிர்கொள்ளப் போவது என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு பிறகும் பெண்கள் முன்வந்து அவர்களின் பிரச்சினையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற பாதுகாப்பு அவர்களுக்கு திரைத்துறையில் இருந்தே வழங்கப்பட வேண்டும் . அது என்னுடைய வேண்டுகோள்.
மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி போல தமிழ் திரையுலகிலும் அதுபோல ஒரு கமிட்டி உருவாக வேண்டும். ஆனால் இந்த கமிட்டிகள் ஒரு கண்துடைப்பாக மட்டும் இருந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேசி சமாதானம் செய்து மூடி மறைப்பதாக இருக்கக்கூடாது. உறுதியாக பேசக்கூடிய கமிட்டியாக இருக்க வேண்டும், ஸ்ட்ராங்கா பேசக்கூடிய தலைவரும் இருக்க வேண்டும்.
பின்விளைவுகளை நினைத்து பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து பேச பயப்படுகிறார்கள். இது வரையில் இது போன்ற பிரச்சனைகள் மூடி மறைப்பது போல தான் நடந்துள்ளது. அதை விஷயமாக எடுத்து வெளிப்படையாக யாருமே பேசியது கிடையாது. உண்மையிலேயே இந்த விஷயத்துக்காக போராடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் பேசக் கூடியவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருத்த ஒருவர் இந்த கமிட்டியில் இருந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் நடிகைகளுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
ஒரு பெண்ணுடைய பிரச்சனையை ஒரு பெண்ணாக பாவித்து தான் அதை பார்க்க வேண்டுமே தவிர அவருடைய கேரக்டரை அவருடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை வைத்து தீர்மானிக்க கூடாது. யார் பிரச்சனையை சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் என்ன பிரச்சனை முன் வைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அப்படி ஆதரவு தெரிவிப்பவர்களையும் அட்டாக் செய்கிறார்கள் அல்லது ட்ரோல் செய்கிறார்கள். வெளிப்படையாக முன்வந்து பிரச்சினையை சொல்லும் பெண்கள் ஏராளமான சிரமங்களை அனுபவிப்பதாக நான் கேள்விப்படுகிறேன் என பேசி இருந்தார் நடிகை விசித்ரா.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)