Actress Urvashi: 'இங்கு மட்டும் தான் சாதி இல்லை’ .. பளிச்சென்று பேசிய ஊர்வசி.. குவியும் பாராட்டு..!
என்னை கண்டெடுத்தது, உயிர் மூச்சு தமிழ் சினிமா என சார்லஸ் எண்டர்பிரைசஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
என்னை கண்டெடுத்தது, உயிர் மூச்சு தமிழ் சினிமா என சார்லஸ் எண்டர்பிரைசஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “சார்லஸ் எண்டர்பிரைசஸ்”. அஜித் ஜோய் தயாரித்துள்ள இப்படமானது காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நடிகை ஊர்வசி, “சினிமாவுக்கு நான் தேவைப்பட்டேன் என தொகுப்பாளர் சொன்னார். அது சரியான ஒன்று. எப்படி என்றால், ‘என்னை கண்டெடுத்தது, உயிர் மூச்சு தமிழ் சினிமா. நான் நேசிக்கிற முதல் மொழி தமிழ். அதன் மகளோ, சகோதரியோ தான் என்னுடைய தாய் மொழியான மலையாளம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் படித்தவர்களுக்கு இருக்காது. தமிழில் இருந்து வந்த பல மொழிகளில் ஒன்று மலையாளம்.
ஆனால் இன்னைக்கும் சுத்தமான தமிழ் மலையாளத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. காண்பது, உண்பது, கிடப்பது என்ற வார்த்தைகள் மலையாளத்தில் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய மாறி விட்டது. அப்போதெல்லாம் நாங்கள் மேஜர் சுந்தர்ராஜனை கிண்டல் செய்துக் கொண்டிருப்போம்.
ஊடகங்கள் தான் பெரிய படங்களை விட சின்ன சின்ன படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னை போன்ற பிரபலங்களிடம் என்ன பிடிக்கும்? யாரெல்லாம் பிடிக்கும்? என கேட்பவர்கள் எந்த தயாரிப்பாளரைப் பிடிக்கும் என்ற கேள்வியை கேளுங்கள். கொரோனா காலத்தில் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. காரணம் மூக்குத்தி அம்மன், சூரரைப் போற்று, புத்தம் புது காலை படங்கள் எனக்கு மக்களிடையே மிகப்பெரிய பாராட்டுகள் கிடைத்தது.
புத்தம் புது காலை பார்த்து விட்டு ஒருநாள் இயக்குநர் சுபாஷ் போன் பண்ணி பாராட்டினார். நான் அவரிடம் என்ன பண்றீங்க என கேட்டேன். அதற்கு சினிமாவில் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார். நானும் பாசிட்டிவாக சீக்கிரமே வர வேண்டும் என வாழ்த்தினேன். அதன்பின்னர் மறுநாள் போன் செய்து, இந்த மாதிரி கதை ஒன்று உள்ளது என கூறி ஒன்லைன் அனுப்பினார். எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. இந்த படத்தின் கேரக்டர் இதுவரை நான் பண்ணாத கேரக்டர்” என ஊர்வசி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,”நட்புத் தான் நம்மை தூக்கிப் பிடிக்கிறது. காரணம் நட்புக்கு மொழி இல்லை, சாதி இல்லை. மதல் இல்லை. பணம் இல்லை. காதல் தான் உலகின் மிகப்பெரிய விஷயம் என்று சொல்லுவோம். அது உண்மைதான். ஆனால், அதைக்காட்டிலும் நம்முடைய கடைசி காலம் வரை சாகும் வரையில் வரக்கூடிய நட்புக்குத்தான் மரியாதை என்பது இந்த படத்தின் மெசெஜ்” என ஊர்வசி தெரிவித்துள்ளார்.