Vijay Antony : வாழ்ந்து தான் பார்க்கலாமே... தற்கொலை மட்டுமே ஒரு தீர்வு அல்ல... நடிகை சுதாவின் வேதனையான கோரிக்கை
கஷ்டமோ நஷ்டமோ வாழ்ந்து தான் பார்க்கலாமே என்ற மன தைரியதுடன் போராட வேண்டும். எந்த பிரச்சினை இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்கும். வாழ்க்கையில இது ஒன்னு தான் முடிவு கிடையாது - நடிகை சுதா
இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் இன்று அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டார். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சோகமான சம்பவம் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் கனத்த இதயத்துடன் விஜய் ஆண்டனியின் மகளுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்த நடிகை சுதா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நேற்று காலை வரையில் நான், விஜய் ஆண்டனி சார் அனைவருமே ஒன்றாக தான் ஒர்க் செய்து கொண்டு இருந்தோம். தொடர்ந்து பத்து நாட்களாக அவருடன் நான் ஒர்க் செய்து கொண்டு இருக்கிறேன். இந்த செய்தி ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஒரு நல்ல செய்தி என்றால் அதை சந்தோஷமாக பகிர்ந்து கொள்ளமுடியும். ஆனால் இது போன்ற எதிர்பாராத ஒரு துக்கமான செய்தியை கேட்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஒரு அம்மாவாக எனக்கே இவ்வளவு வேதனையை இருக்கும் போது பெற்றவர்களுக்கு எவ்வளவு வேதனையா இருக்கும். ஒரு தாயா அந்த வேதனை எனக்கு தெரியும் என்னால் உணர முடிகிறது"
"நேற்று ராத்திரி வரையில் அவர் வேறு ஒரு ஷூட்டிங்கில் ஈடுபட்டு இருந்தார். அவரே இதை எதிர்பார்க்கவில்லை. யார் தான் இது போன்ற விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். அவரும் அவரின் குடும்பமும் இந்த வலியில் இருந்து வெளிவர வேண்டும். அதற்கான தைரியத்தையும் மனவலிமையையும் அந்த கடவுள் தான் கொடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்வோம்" என்றார்.
கடந்த ஆண்டு கவிஞர் கபிலனின் மகள் தற்போது விஜய் ஆண்டனி மகள் என தொடர்ந்து திரைத்துறையை சென்றவர்களின் குழந்தைகள் இது போன்ற தற்கொலை முடிவுகளை எடுக்க என்ன காரணம்? சமூகம் எதை நோக்கி பயணிக்கிறது என்பது பற்றி அவருடைய கருத்து கேட்கப்பட்டது. அதற்கு நடிகை சுதா பதில் அளிக்கையில் "இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொருந்தும். கஷ்டமோ நஷ்டமோ வாழ்ந்துதான் பார்க்கலாமே என்ற மனதைரியதுடன் போராட வேண்டும். எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்கும். வாழ்க்கையில இது ஒன்னுதான் முடிவு கிடையாது. எந்த ஒரு மனக்கவலை, பிரச்சனை இருந்தாலும் அதை அப்பா அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு நம்பகமான ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தற்கொலை மட்டுமே முடிவு கிடையாது. இந்த வேதனை வலிக்கு யாரும் செல்லாதீர்கள். உங்களை பெற்றவர்களுக்கு தான் அந்த வலி. பெற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் நிச்சயம் நல்ல ஒரு தீர்வு நல்ல ஒரு வழி கிடைக்கும்" என்றார்.