Actress Sona: 99% உண்மை... தன் சுயசரிதையை தானே இயக்கி நடித்துள்ள நடிகை சோனா: பரபரப்பு கிளப்புவாரா?
Sona Heiden : நடிகை சோனா தன்னுடைய சுயசரிதையை இணைய தொடராக இயக்கியதன் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
இயக்குநரான சோனா
தென்னிந்திய சினிமாவில் 2000களின் மத்தியில் தொடங்கி பிரபலமாகவும் பரபரப்பைக் கிளப்பி வருபவருமாக இருப்பவர் நடிகை சோனா. அஜித் - ஜோதிகா நடிப்பில் வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் நடித்து வந்த நடிகை சோனா தற்போது ஒரு இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கை சுயசரிதத்தை 'ஸ்மோக்' என்ற பெயரில் இயக்கியுள்ளார். கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வாழ்க்கை கதையை ஒரு தொடராக வார இதழ் ஒன்றுக்காக எழுதி அதை வெளியிட்டார். அந்தத் தொடர் மக்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பி பேசுபொருளானது. பின்னர் புத்தகமாக வெளியானது.
2014ஆம் ஆண்டு இயக்குநருக்கான பயிற்சிகளை பயின்று பல நுணுக்கமான விஷயங்களை கற்றறிந்தார். தன்னுடைய சுயசரிதத்தைத் திருத்தி எழுதி ஒரு ஸ்கிரிப்ட்டாக தயார் செய்து, அதை ஒரு தொடராக வெளியிட முடிவெடுத்து, அதற்கான பணிகளை செய்து வருகிறார். யுனிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த இணைய தொடர் ஷார்ட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஸ்மோக் இணைய தொடர்
'ஸ்மோக்' என்ற இணைய தொடர் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கும் நடிகை சோனா. இதில் தன்னுடைய கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'ஸ்மோக் சீசன் 1 ' படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
சோனாவின் சிறுவயது முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரின் கதாபாத்திரமாக நடிப்பவர்களின் போஸ்டர்களை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. 5 வயது கதாபாத்திரமாக ஆதினி, 14 வயது கதாபாத்திரமாக ஜனனி மற்றும் 30 வயது கதாபாத்திரமாக அபய் நடிக்கிறார்கள் என்பது வெளியான போஸ்டர் மூலம் அறியப்பட்டது. மேலும் சோனா தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த பயோபிக் படத்தில் 99% உண்மையை சொல்லப்போவதாகவும் சோனா தெரிவித்துள்ளார். “புகை படர்ந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கையில், வாழ்க்கை என்னை எந்தெந்த இடங்களுக்கு, சூழல்களுக்கு அழைத்துச் செல்லும் போது, எது சரியானதாக இருக்கும் என்பதை சொல்லத் தெரியவில்லை. என்னுடைய கதையை சொல்வதால் கேட்கப்பட்ட அல்லது மறந்து போன கேள்விகள், சொல்லப்படாத அல்லது மறைக்கப்பட்ட உண்மைகள் குறித்து வெளிப்படையாக இயக்கியுள்ளேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னைப் பாருங்கள்.
வெளிப்படையாக சில விஷயங்களை திரைப்படம் மூலம் சொல்லும்போது அது பலருக்கும் பிடிக்காது. ஆனால் அதை இணைய தொடராக வெளியிடும்போது வெளிப்படையாக சுதந்திரமாக சொல்ல முடியும் என்பதால் தான் இதை இணைய தொடராக வெளியிட முடிவு செய்தேன். நான் பணியாற்றிய அனைத்து படங்களின் இயக்குநர்களுக்கும் இப்படத்தை சமர்ப்பிக்கிறேன்" என தெரிவித்து இருந்தார் சோனா.
கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த இணைய தொடர் ஷார்ட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.