நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
பிரபல நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சோபனா குடியரசு தலைவர் கைகளால் இன்று மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார்.

உலகில் மிக உயரிய விருதுகளில் பத்ம விருதுகளும் ஒன்று. தங்களின் துறையில் சிறந்து விளங்குபவர்கள், சமூக சேவை, மற்றும் பிற தகுதிகள் அடிப்படையின் இந்த விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டுக்கான, பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. நடிகரும், கார் ரேசருமான அஜித் குமார், நடிகையும் - பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா, மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்து, மத்திய அரசு அவர்களை கௌரவப்படுத்தியது.
கடந்த ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் முதல் கட்டமாக நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்துடன் வந்து விருதை பெற்று கொண்டார். இதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்று, நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா மற்றும் நல்லி குப்புசாமி ஆகியோர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரசிகர்களும் நடிகை ஷோபனாவுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.





















