Khushbu Sundar : கொழுக்கட்டைக்காக கோஷம் போட்டேன்.. குஷ்பு என்ற பெயர் இப்படித்தான் வந்துச்சு.. குஷ்பு ஜாலி பேட்டி..
தான் நடிக்க வந்தது, மும்பையில் தான் வசித்த சூழல் என பல்வேறு சுவாரசிய பகுதிகளைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்தாலும் கட்சிப் பணிகளைக் குறைத்துக் கொண்டு தற்போது சுய ஆரோக்கியத்தில் அதீத கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் குஷ்பு. அண்மையில் ஒரு யூட்யூப் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் தான் நடிக்க வந்தது, மும்பையில் தான் வசித்த சூழல் என பல்வேறு சுவாரசிய பகுதிகளைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.
View this post on Instagram
”எனக்கு மூன்று அண்ணன்கள். வீட்டில் நான் தான் கடைக்குட்டி. மும்பையில் நாங்கள் வசித்த பகுதி ஒரு குட்டி இந்தியா மாதிரி. நாங்கள் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள் இருந்தோம். மற்றபடி, அங்கிருந்தவர்கள் அனைவருமே பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தீபாவளி, கிருஷ்ண ஜெயந்திக்களுக்கு நடுவேதான் நாங்கள் வளர்ந்தோம். விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் அவர்கள் கொடுக்கும் கொழுக்கட்டைக்காக ஜெய் ஜெய் கோஷம் போடுவோம். நான் சென்னை வந்த பிறகு எனது மூன்று அண்ணனும் கூடவே வந்துவிட்டார்கள்.அண்ணனுக்கு நடிகர் ஹேமமாலினி மற்றும் அவர்களது குடும்பம் நல்ல பழக்கம். அதனால் அவருடன் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அங்குதான் அவர்கள் வீட்டில் இட்லி, தோசை எல்லாம் சாப்பிடுவேன். அப்படி ஒருமுறை சென்றபோதுதான் தயாரிப்பாளர்கள் ரவி சோப்ரா மற்றும் அவரது தந்தை பி.ஆர். சோப்ரா வந்திருந்தார்கள்.என்னைப் பார்த்ததும் இந்த பெண் நடிப்பாளா எனக் கேட்டார்கள். நான் நடிச்சா என்ன தருவீங்க எனக் கேட்டேன். உனக்கு என்ன வேணும் என அவர்கள் கேட்கவும் தினமும் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் என பதில் அளித்தேன்.இது நடந்தபோது எட்டு வயது. அவர்கள்தான் என்னுடைய பெயரை குஷ்பூ என மாற்றினார்கள்.
இஸ்லாத்தில் நிக்கத் எனதான் பெயர் உண்டு. என்னுடைய பெயர் நக்கத் என்பது பெர்ஸிய மொழி சார்ந்ததாக இருந்தது.அதனால் அதற்கு ஈடான இந்தி பெயரை ‘குஷ்பு’ என எனக்குச் சூட்டினார்கள்” என்கிறார்.