Manorama Birthday: எம்.எஸ்.வி முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... மனோரமாவின் காந்தக் குரலில் ஹிட் அடித்த பாடல்கள்!
கிட்டத்தட்ட 1000 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள மனோரமா, தமிழ் சினிமாவில் தனித்துவ குரலைக் கொண்ட சிறந்த பாடகியாகவும் வலம் வந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் அன்புக்குரிய ஆச்சி நடிகை மனோரமா, 5 முதலமைச்சர்களுடன் நடித்தவர் (அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா, மறைந்த முன்னாள் மனோரமா முதலமைச்சர் ஆந்திர என்.டி.ராமாராவ்), 50 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்களின் உள்ளங்களில் அமர்ந்து ஆட்சி செய்தவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் தமிழ் சினிமாவின் மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா.
தன் 12ஆம் வயதில் மாலையிட்ட மங்கை எனும் படத்தில் அறிமுகமாகி தன் ஹீரோ, ஹீரோயின் தாண்டி தன் தனித்துவ நடிப்பு, கம்பீரமான குரல், நடை, உடை பாவனை என அனைத்தாலும் கோலிவுட் ரசிகர்களை கட்டிப்போட்டார். சிவாஜி, நாகேஷ், நம்பியார் தொடங்கி ரஜினி, கமல், விஜய்,அஜித் என பல தலைமுறை நடிகர்களுடன் நடித்து நம் குடும்பத்தில் ஒருவரைப் போல் அனைவரது மனதிலும் பதிந்த மனோரமா இறுதியாக சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.
கிட்டத்தட்ட 1000 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள மனோரமா, தமிழ் சினிமாவில் தனித்துவ குரலைக் கொண்ட சிறந்த பாடகியாகவும் வலம் வந்துள்ளார்.
எம்.எஸ்.வி தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் வரை தமிழ் சினிமாவின் டாப் இசையமப்பாளர்களுக்கு அந்தந்த காலக்கட்டத்தில் அவர் பாடி பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த பிரபல பாடல்களைப் பார்க்கலாம்
போகாதே என் கணவா:
1963ஆம் ஆண்டு வெளியான ரத்த திலகம் எனும் படத்தில் மனோரமா தன் முதல் பாடலான போகாதே என் கணவா எனும் பாடலை விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பாடியிருந்தார்.
வா வாத்தியாரே ஊட்டாண்ட...
1968ஆம் ஆண்டு வெளியான பொம்மலாட்டம் எனும் படத்தில் வி குமார் இசையில் அமைந்த இந்தப் பாடல் ஒலிக்காத மேடைகள் இல்லை. இன்றைய சூப்பர் சிங்கர் மேடைகள் வரை குழைந்தைகள் இந்தப் பாடலைப் பாடி ஆச்சியை கொண்டாடி வருகின்றனர்.
டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லத் தட்டாதே!
1989ஆம் ஆண்டு வெளியான ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் மனோரமாவை தங்கள் சொந்த ஆச்சியாக அனைவரையும் கொண்டாட வைத்தது.
மெட்ராஸ் சுத்தி பாக்க போறேன்....
1994ஆம் ஆண்டு மே மாதம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற் இப்பாடல், 90ஸ் கிட்ஸின் ஆல்டைம் மனோரமா பாடல்களுள் ஒன்று. சென்னையை சுற்றிப்பார்க்க வருபவர்கள் இந்தப் பாடலை நினைவுகூராமல் சுற்றுவது அரிதினும் அரிது.
கோத்தகிரி குப்பம்மா:
தேவா இசையில் 1995ஆம் ஆண்டு வெளியான தேவா படத்தில் விஜய் - ஸ்வர்ணலதாவுடன் இனைந்து இப்பாடலைப் பாடியிருந்தார்.
நாட்டுப்புறப்பாட்டு
1996ஆம் ஆண்டு வெளியான நாட்டுப்புறப்பாட்டு படத்தில் இடம்பெற்ற இப்பாடலை சித்ராவுடன் இணைந்து இளையராஜா இசையில் மனோரமா பாடியிருந்தார். இப்படி தன் 50 ஆண்டு கால சினிமா வாழ்வில் நாம் மறக்க முடியாத பாடல்களைப் பாடிச் சென்ற நடிகை மனோராமாவை என்றென்றும் கோலிவுட் ரசிகர்கள், அவரது பாடல்கள் வாயிலாக நினைவுகூர்வார்கள்.