பிரபாஸ் படத்தில் இருந்து விலகிய தீபிகா படுகோன்...கண்டிஷன் போட்டதால் கடுப்பான இயக்குநர் ?
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஸ்பிரிட் படத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட்
தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சந்தீப் ரெட்டி வங்கா. தெலுங்கில் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ் மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்தியில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தை இயக்கினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 900 கோடி வரை வசூலித்த நிலையில் அவருக்கும் பாலிவுட்டில் பெரிய மார்கெட் உருவானது. தற்போது பிரபாஸை வைத்து தனது மூன்றாவது படமான 'ஸ்பிரிட்' படத்தை இயக்கி வருகிறார். ஹாரர் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகிய தீபிகா படுகோன்
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஸ்பிரிட் படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகியுள்ளார் என தெரியவந்துள்ளது. தீபிகா படுகோன் மற்றும் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பரஸ்பரம் பேசி இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தீபிகா படுகோன் நிறைய கண்டிஷன்களை போட்டது இயக்குநருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
தீபிகா படுகோன் போட்ட கண்டிஷன்கள்
ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டது மட்டுமில்லாமல் படத்தின் லாபத்தில் ஷேரும் தீபிகா கேட்டுள்ளாராம். படப்பிடிப்பு நேரத்தையும் குறைக்க சொன்னதாகவும் தெலுங்கு மொழியில் வசனங்கள் பேச மறுத்ததாலும் இந்த படத்தில் இருந்து அவரை விலக்க இயக்குநர் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ரசிகர்களிடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பளத்தை உயர்த்தி கேட்டது அந்த நடிகையின் தப்பு இல்லை. இதற்கு எதற்கு அவரை விமர்சிக்க வேண்டும். பிரபாஸைக் காட்டிலும் தீபிகா பெரிய நடிகைதான் என தீபிகா ஆதரவாளர்கள் பிரபாஸ் ரசிகர்களை விமர்சித்து வருகிறார்கள். பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து கல்கி படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.





















