Surya: "இப்படி நடக்கும் என நினைக்கவே இல்லை" ரோலக்ஸ் கதாபாத்திரத்தால் சூர்யா ஆச்சரியம்
ரோலக்ஸ் கதாபாத்திரத்தால் இப்படி ஒரு அன்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை என்று நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நான் நினைக்கவே இல்லை:
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கங்குவா படத்தின் இயக்குனர் சிவாவுடன் நடிகர் சூர்யா பங்கேற்றார். அவரிடம் ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த சூர்யா, “ அரைநாள் மட்டுமே அதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த கதாபாத்திரத்தில் இப்படி ஒரு அன்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.
அந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனராஜ் என்னைச் சந்தித்தார். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு தனி படமும், இரும்புக்கை மாயாவி குறித்தும் பேசினோம். அவருக்கும் எனக்கும் சில வேலைகள் இருந்ததால் தள்ளிப்போகிறது. காலம்தான் பதில் சொல்லும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
ரோலக்ஸ்:
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் மாபெரும் ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் கிளைமேக்ஸ் காட்சிக்கு பிறகு வரும் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு ரோலக்ஸ் கதாபாத்திரமும் முக்கிய காரணமாக அமைந்தது.
லோகேஷ் கனகராஜ் யுனிவர்சான எல்.சி.யூ.வில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக தனிப்படம் உருவாக்கப்படும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது எல்.சி.யூ. படங்களில் மிகப்பெரிய வில்லனாக ரோலக்ஸ் கதாபாத்திரமே அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா படம்:
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் கூலி படத்திற்கு பிறகு அவர் மீண்டும் எல்.சி.யூ. வரிசை படத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். அதில், தன்னுடைய எல்.சி.யூ. வரிசை படங்களில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரமும் அதில் இடம்பெறும் என்றும் அவர் கூறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சூர்யா நடிப்பில் கடைசியாக 2022ம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. அதன்பின்பு, விக்ரம், ராக்கெட்ரி, சர்ஃபியா படங்களில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் அவரது தனி படம் வெளியாகாமலே இருந்தது. இந்த நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் படம் வெளியாகிறது. மேலும், சூர்யா நடித்துள்ள சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பும் முடிந்து அதற்கான இறுதிக்கட்ட பணிகளை அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மேற்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.