Kanguva: கோலிவுட்டின் தீராத ஏக்கம்! தமிழின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெறுமா கங்குவா?
தமிழ் சினிமாவில் இதுவரை கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர். அளவிற்கு பிரம்மாண்ட வெற்றிப் படம் அமையாத நிலையில் அந்த ஏக்கத்தை கங்குவா தீர்க்குமா? என்ற ஏக்கம் எழுந்துள்ளது.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய வர்த்தகத்தை கொண்டது இந்தி திரையுலகமான பாலிவுட். அவர்களுக்கு பிறகு மிகப்பெரிய வர்த்தகத்தை கொண்ட திரையுலகமாக திகழ்வது தமிழ் திரையுலகமும், தெலுங்கு திரையுலகமும் ஆகும்.
தென்னிந்தியாவில் மிகப்பெரிய பொருட்செலவில் படங்களைத் தயாரிப்பதும், வருவாய் ஈட்டுவதும் இந்த இரு திரையுலகங்களே ஆகும், இந்திய சினிமாவைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே பான் இந்தியா எனப்படும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இந்தியா முழுவதும் படத்தை ரிலீஸ் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
பாகுபலி, கே.ஜி.எஃப்:
இதற்கு அச்சாரமிட்டது ராஜமௌலியின் பாகுபலியே ஆகும். அரசர் காலத்து கதையாக உருவான பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரபாஸின் நடிப்பில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாக வெற்றி உலக நாடுகளிலும் எதிரொலித்தது. இதனால், மற்ற திரையுலகங்களையும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் எடுக்க தூண்டியது. இதில், தொடக்கத்தில் முயற்சி கொண்ட இந்தி திரையுலகம் தோல்வியையே சந்தித்தது.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் கன்னட திரையுலகம் பாகுபலி படத்தின் வெற்றியையே கடந்த வெற்றியை பெற்றது.. கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப். படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பும்,.. ப்ளாக்பஸ்டர் வெற்றியும் கர்நாடகாவைத் தாண்டி வெளியில் தெரியாமல் இருந்த கன்னட திரையுலகை உலக அரங்கில் பெருமை பெற்றதற்கு காரணமே கே.ஜி.எப். படம். அந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
பாலிவுட்டிலும் அசத்தல்:
பாகுபலி வெற்றிக்கு பிறகு மற்றொரு பான் இந்தியா வெற்றியை ஆர்.ஆர்.ஆர் மூலமாக தெலுங்கு திரையுலகம் அளித்தது. தென்னிந்தியாவின் முக்கிய திரையுலகமான தமிழில் ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் படங்களுக்கு நிகரான வெற்றியைப் பெறுவதற்காக பொன்னியின் செல்வன், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் இந்திய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இந்தியிலும் பான் இந்தியா அளவில் எடுக்க முயற்சித்து தோல்வியை மட்டுமே பாலிவுட் சந்தித்து வந்த நிலையில், பதான் மற்றும் ஜவான் படங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற்று ஷாருக்கானுக்கு மிகப்பெரிய கம்பேக் வெற்றியை ஒரே ஆண்டில் தந்தது. பான் இந்தியா அளவிலும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
கோலிவுட்டில் தீராத தாகம்:
இந்தி, தெலுங்கு, கன்னடம் திரையுலகங்கள் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள நிலையில், இந்திய சினிமாவிற்கே முன்னோடியாக திகழும் தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றி இதுவரை கிட்டவில்லை. தமிழ் சினிமாவின் தீராத இந்த தாகத்தை கங்குவா தீர்க்குமா? என்பதே தமிழ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும்.
தமிழில் முதல் பான் இந்தியா வெற்றியைத் தருமா கங்குவா?
இயக்குனர் சிவா இயக்கத்தில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் வாழ்க்கை கதையாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் கங்குவா உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் கார்த்தி முக்கிய வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் ரிலீசாகிறது.
படத்தில் பிரான்ஸிஸ் – கங்குவா என இரு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில், 2 மணி நேர காட்சிகள் கங்குவா கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் அபோகலிப்டாவாக கங்குவா இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் நம்பும் நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து கே.ஜி.எஃப்., ஆர்.ஆர்.ஆர்., பாகுபலிக்கு நிகரான வெற்றியை கங்குவா பெறும் என்று படக்குழு நம்புகிறது. இதற்காக இந்திய அளவில் கங்குவா ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்தியாவை திரும்பி பார்க்கும் பான் இந்தியா வெற்றியை கங்குவா பெறுமா? தமிழ் சினிமாவிற்கு உலக அரங்கில் சூர்யா – சிவா கூட்டணி புதிய மகுடத்தை சூட்டி அழகு பார்க்குமா? என்பதை வரும் நவம்பர் 14ம் தேதி நாம் அறிந்து கொள்ளலாம்.