Sumathi Sri : திறமை இருந்தாலும் இப்படித்தான்.. பாத்திரம்தான் கழுவணும்.. சுமதி ஸ்ரீ சொன்ன கதை.!
நடிகை சுமதி ஸ்ரீ, இவரை நாம் வெள்ளித் திரையிலும் பார்த்திருப்போம். சின்னத் திரையிலும் பார்த்திருப்போம். மதுரையைச் சேர்ந்த இவர், இரண்டு வயதிலேயே நடித்திருக்கிறார்.
நடிகை சுமதி ஸ்ரீ, இவரை நாம் வெள்ளித் திரையிலும் பார்த்திருப்போம். சின்னத் திரையிலும் பார்த்திருப்போம். மதுரையைச் சேர்ந்த இவர், இரண்டு வயதிலேயே நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக உலா வந்தார். பெண் குழந்தையாக இருந்தாலும் கூட சிறுவன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஒரு குழந்தையாக நந்தி விருது மற்றும் பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். வளர்ந்த பின்னர் தெலுங்கு, மற்றும் மலையாளப் படங்களில் நடித்தார். இவரது அண்ணன் மாஸ்டர் பிரபாகர், தம்பி குமாரும் திரைப்படங்களில் நடித்தனர். சுமதி ஸ்ரீயின் பெரியப்பா தமிழ்த் திரையுலகம் நன்கு அறிந்த நடிகரான ஏ.கே.வீராச்சாமி. அவர் வீட்டில் தங்கிதான் அப்பா நடிப்பு வாய்ப்பு தேடினார்.
அவர் ஒரு நேர்காணலில், "பல்லாண்டு வாழ்க படத்தில் என் அப்பா தங்கராஜ் எம்ஜிஆருக்கு மெயின் வில்லனாக நடித்தார். அந்தப் படத்தில் அப்பா எம்எல்ஏவாக நடித்தார். அந்தப்படம் ஹிட் ஆனது. அப்போது விருது வழங்கும் விழாவில் அப்பாவின் பெயரை அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரையும் சேர்த்து எம்எல்ஏ தங்கராஜ் எனப் போடுமாறு எம்ஜிஆர் சொன்னார். அதன் பின்னர் தான் அப்பா நிரந்தர எம்எல்ஏ ஆனார். அம்மாவும் திரை நடிகை தான். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருப்பார். சிவாஜி சாருக்கு பத்மினி அம்மா வீட்டுக்கு வழி சொல்வார். 20 படங்களில் நடித்திருப்பார். எனக்கு 12 வயதிருக்கும் போது அம்மாவிடம் என் நடிப்பு ஆர்வத்தை தெரிவித்தேன். அப்போது முதன்முதலாக ஒரு நாடகத்தில் நடித்தேன். புள்ளப்பூச்சி என்ற நாடகம் தான் முதன்முதலில் நடித்த கேரக்டர். அதில் என் பெயரே புள்ளப்பூச்சி தான். அதன்பின்னர் வரலாற்று நாடகங்களில் நடித்தேன். வரலாற்று நாடகங்களுக்காக மாதக் கணக்கில் ஒத்திகை செய்வோம்.
12 வயதிலிருந்து பல நூறு நாடகங்களில் நடித்தேன். நான் முதன்முதலில் வாங்கிய சம்பளம் வெறும் ரூ.10 தான். யாமிருக்க பயமேன் என்ற படத்தில் நடித்தேன். சுமங்கலி என்ற நாடக ட்ரூப் நடத்திய பாரி காண்டீபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவர் அந்தக் காலத்திலேயே டபுள் எம்.ஏ. செய்தவர். அவரது தந்தை அசோகன் சாருடைய நாடகங்களுக்கு வசனம் செய்தவர். ஆனால், திருமணத்துக்குப் பின்னர் நடிக்கக் கூடாது என்று கணவரின் பெற்றோர் சொன்னார்கள்.
நான், என் கணவர் மீதான காதலால் நானும் சரி நடிக்கவில்லை என்றேன். ஆனால், என் குழந்தை பிறந்து 6 மாதங்களிலேயே கஷ்டம் வந்தது. உடனே, வீட்டில் மாமனார், மாமியாரிடம் பேசி நடிக்க சம்மதம் வாங்கினேன். திருமணத்துக்கு முன்னர் 40 படங்களில் நடித்திருந்தேன்.
1995ல் செந்தூரபாண்டி படத்திற்குப் பின்னர் திருமணம் ஆனது. ஹார்ட்அட்டாக் வந்து என் கணவர் இறந்துவிட்டார். 9 வருட கால திருமண வாழ்க்கை திடீரென இருண்டதுபோல் உடைந்து போனேன். பாத்திரம்தான் கழுவியிருக்கவேண்டும். அந்த நிலைமை வந்தது. அவர் மறைவுக்குப் பின்னர் சீரியல் வாய்ப்புகளைத் தேடினேன்.
28 வயதில் வயசான அம்மா கேரக்டர் ஏற்றுக் கொண்டேன். டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றி வருகிறேன். நடிகர் சங்க உதவியுடன் என் மகளை கல்லூரி வரை படிக்க வைத்தேன். என் மகள் பி.காம், எம்.பி.ஏ. படித்தார். நான் தனி ஆளாக சம்பாதித்து, மகளை ஆளாக்கி இப்போது திருமணமும் செய்து வைத்துள்ளேன். அவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துவிட்டது. நான் இப்போது நிறைவான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் நிறைய நடித்திருந்தாலும் பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை என்ற கவலை மட்டும் உண்டு” என்றார்
இவ்வாறு சுமதி ஸ்ரீ தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.