Watch Video: பங்கமாக கலாய்த்த பாட்டி.. விடுதலை ஷூட்டிங் ஸ்பாட்டில் நொந்துபோன சூரி.. என்ன நடந்தது?
விடுதலை படத்தின் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மீது எனக்கு சிறிய வருத்தம் ஏற்பட்டதாக நகைச்சுவையாக சூரி கதை ஒன்றை தெரிவித்தார்.
விடுதலை படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு நிகழ்வால் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மீது எனக்கு சிறிய வருத்தம் ஏற்பட்டதாக நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “விடுதலை”. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபதி போராளியாக நடித்துள்ளார். ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள நிலையில் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜால் தான் பெற்ற மறக்க முடியாத நிகழ்வை நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
This story 👌😂pic.twitter.com/c30P7FReWZ
— AmuthaBharathi (@CinemaWithAB) March 8, 2023
அவர் பேசுகையில், “விடுதலை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு தினமும் ஒரு பாட்டி என்னை பார்க்க வந்துள்ளார். ஆனால் நான் இல்லாத நேரம் அவர் வருவதை கவனித்த ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், என்னிடம் விஷயத்தை சொன்னார். மேலும் அந்த பாட்டியை நீங்கள் பார்க்க வேண்டும் எனவும் கூற, நேராக தெருமுனையில் இருந்த அவரது வீட்டுக்கு சென்றேன். என்னைக் கண்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி கையை கூட கழுவாமல் வேகமாக ஓடி வந்து கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்தியது.
பின்னர் என்னை கொஞ்சிவிட்டு, என்ன தம்பி படத்துல கலரா இருப்பீங்க. நேர்ல கருப்பா இருக்கீங்க என கேட்க, நான் எனக்கு மேக்கப் அப்படி போட்டு விட்டுருக்காங்க என தெரிவித்தேன். பின்னர் உங்கப்பான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட பெரிய ரசிகர்யா. அப்பாவோட படங்கள் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அரண்மனை கிளி படங்கள் ரொம்ப பிடிக்கும் எனவும், கல்யாணம் முடிந்து ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் தான் முதலில் பார்த்தேன் எனவும் பாட்டி சொல்ல, நான் குழம்பி போய்விட்டேன்.
உடனே பாட்டியிடம் ஆத்தா.. நீ யாரை சொல்ற என கேட்க, சிவகுமார் பையன் தானே நீ.. உன் தம்பி கூட நடிக்கிறான்ல என பாட்டி சொல்ல எனக்கு ஷாக்காகி விட்டது. திரும்பி பார்த்தா என்கூட வந்த ஒருத்தரையும் காணவில்லை. உடனே நான் சிவகுமார் பையன் சூர்யா இல்லை என சொல்ல, பட்டென கதவை அந்த பாட்டி மூடிக் கொண்டது என சூரி அந்த விழாவில் தெரிவித்தார். இதைக்கேட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மட்டுமல்ல, வீடியோவை பார்த்த அனைவரும் சூரியின் நிலைமையை எண்ணி சிரிப்பலையில் ஆழ்ந்தனர்” என்பது குறிப்பிடத்தக்கது.