சினிமாவை விட்டு விலக முடிவு செய்த சிவகார்த்திகேயன்..மனைவி ஆர்த்தி கொடுத்த தைரியம்
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவை விட்டு விலக இருந்ததாகவும் அப்போது தனது மனைவி ஆர்த்தி தனக்கு சொன்ன வார்த்தைகளை ப்கிர்ந்துகொண்டுள்ளார்
சிவகார்த்திகேயன்
மிமிக்ரி கலைஞனாக தனது பயணத்தைத் தொடங்கி பின் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர். அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் மார்கெட் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால். இந்த இடத்திற்கு பல்வேறு போராட்டங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ரெமொ படத்தை ஆடியோ லாஞ்சில் கண் கலங்கியது முதல் சினிமாவை விட்டு விலகப் போவது வரை பல சவாலான தருணங்களை கடந்து வந்துள்ளார்.
அந்த வகையில் தான் சினிமாவை கைவிட இருந்தபோது தனது மனைவி ஆர்த்தி தனக்கு தைரியம் சொல்லி தன்னை தொடர்ந்து சினிமாவில் இருக்க வைத்ததாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
மனைவி ஆர்த்தி கொடுத்த தைரியம்
" இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் என நினைக்கிறேன். நான் சினிமாவை கைவிட போவதாக தெரிவித்திருந்தேன். நான் சினிமாவில் இருக்கிறேன் அதனால் நிறைய விமர்சனங்கள் பிரச்சனைகளை சந்திக்கிறேன் என்றால் பரவாயில்லை. அதற்காக என் குடும்பம் ஏன் பாதிக்கப்பட வேண்டும். மற்றவர்களைப் போல் அவர்கள் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பாதிக்கப்படும் போது தான் இது நமக்கு வேண்டாம் என தோன்றியது. அடுத்து என்ன செய்வது என்று எல்லாம் யோசிக்கவில்லை நான் எம்.பி.ஏ படித்திருக்கிறேன் ஏதாவது சமாளித்து கொள்வேன் சினிமா போதும் என்று முடிவு செய்தேன். என். ஒருத்தனுக்காக என் குடும்பத்தினர் எல்லாரும் கஷ்டப்பட வேண்டாம். நான் அவர்களுக்காக வாழ்லாம் என முடிவு செய்தேன். அப்போது தான் என் மனைவி சொன்னார் உன்னிடம் எதுவுமே இல்லாமல் இப்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறாய். அஜித் , விக்ரமுக்கு பின் சினிமாவின் எந்த வித பின்புலமும் இல்லாமல் இவ்வளவு பெரிய இடத்திற்கு நீ தான் வந்திருக்கிறாய். உங்கள் மீதான விமர்சனங்கள் எங்களையும் பாதிக்கிறது தான் ஆனால் அதே நேரத்தில் நாங்கள் இதில் கிடைக்கும் நிறைய பலன்களையும் அனுபவித்து தான் வருகிறோம். எல்லாரும் எங்களை அவர்கள் குடும்பத்தைப் போல் பார்க்கிறார்கள். இந்த சினிமாவில் இருந்து வரும் கார் வீடு எல்லாவற்றையும் நாங்கள் அனுபவிக்கிறோம் தான். அதனால் நீ எதைப் பற்றி கவலைப்படாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்து. மற்றதை எதையும் கவனிக்காதே." என்று தனது மனைவி சொன்னதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்