Sivakarthikeyan : இந்த படத்தை மக்கள் கைவிடமாட்டார்கள்...லப்பர் பந்து படக்குழுவினரை சந்தித்து பாராட்டிய எஸ்.கே
லப்பர் பந்து படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அப்படத்தின் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
லப்பர் பந்து
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. காலி வெங்கட் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் இன்று நடைபெற்றது. லப்பர் பந்து படத்தைப் பார்த்து சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்திற்கு பின் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான படங்களில் லப்பர் பந்து குறிப்பிடத் தக்க ஒரு படமாக பாராட்டுகளை பெற்று வருகிறது. விளையாட்டு என்று மட்டுமில்லாமல் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து தன்க்கான அரசியலை மிக நேர்த்தியாக படத்தின் இயக்குநர் பேசியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகபெரிய வெற்றிபெற்ற நிலையில் இப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
லப்பர் பந்து படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்
லப்பர் பந்து படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அப்படத்தின் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார் . படத்தில் தனக்கு பிடித்த பல்வேறு அம்சங்களை பாராட்டி பேசிய அவர் இந்த மாதிரியான படங்களில் ஏற்படும் சவால்கள். அதை இயக்குநர் கையாண்ட விதம் குறித்து பாராட்டி பேசினார். மேலும் இந்த மாதிரியான நல்ல படத்தை மக்கள் எப்போதும் கைவிட்டதில்லை திரையரங்கில் சென்று கொண்டாடுவதற்கான படமாக இப்படம் உள்ளதாக அவர் தெரிவித்தார் . நடிகர் ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் , சஞ்சனா , மற்றும் படத்தில் நடித்த மற்ற நடிகர்களையும் அவர் வாழ்த்தினார்.
Big applause from SK for #LubberPandhu 👏#Sivakarthikeyan continues his tradition of supporting promising directors with his kind words of appreciation for this gem.
— Cinema Talks (@Cinematalks_) September 19, 2024
pic.twitter.com/4OlF1IGD1A
இளம் படைப்பாளிகளை தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகிறார் சிவகார்த்திகேயன் . சமீபத்தில் வெளியான பி.எஸ் வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தது குறிப்பிடத் தக்கது.