Sivakarthikeyan 3rd Baby: குட்டி எஸ்.கே வந்தாச்சு... நடிகர் சிவகார்ர்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை!
நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது
சிவகார்த்திகேயன்
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். காமெடி ரோல்கள் செய்து பின் காமெடி படங்களில் நாயகனாக நடித்து தற்போது ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வருகிறார். நடிப்பு தவிர்த்து எஸ்.கே ப்ரோடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வாழ், குரங்கு பெடல் , தற்போது கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை
சிவகார்த்திகேயன் தற்போது அமரன் , எஸ் கே 23 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் தனது முறை பெண்ணான ஆர்த்தியை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2014 ஆம் ஆண்டு ஆராதனா என்கிற பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுடன் சேர்ந்து கனா படத்தில் யார் இந்த தேவதை பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். ஆராதனாவைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு குகன் தாஸ் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. தனது முதல் ஆண் குழந்தை பிறந்தபோது தனது அப்பாவே தனக்கு மகனாக பிறந்துள்ளதைப் போல் உணர்வதாக உணர்ச்சிவசமாக பேசினார் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே 2 ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். தனது பதிவில் அவர்
" அனைவருக்கும் வணக்கம்
எங்களுக்கு நேற்று இரவு ஜூன் 2 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி" என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வடுகிறார்கள்.
#BlessedWithBabyBoy ❤️❤️❤️ pic.twitter.com/LMEQc28bFY
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 3, 2024