`காதல் வளர்த்தேன் to காதல் வராதா’ - `லூசுப் பெண்ணே’ பாடல் உருவான விதம் பற்றி மனம் திறந்த சிம்பு!
`வல்லவன்’ படத்தில் வரும் `லூசுப் பெண்ணே’ பாடலை உருவான கதை குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார் நடிகர் சிம்பு. அதில் இருந்து சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்.
`வல்லவன்’ படத்தில் வரும் `லூசுப் பெண்ணே’ பாடல் வெளியாகி பல ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் எவர்க்ரீன் பாடலாகக் கருதப்படுகிறது. வெளியான போது அதன் வரிகளுக்காக சென்சேஷனாக மாறிய இந்தப் பாடலை உருவாக்கிய கதை குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார் நடிகர் சிம்பு. அதில் இருந்து சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்.
நடிகர் சிம்பு `லூசுப் பெண்ணே’ பாடல் உருவான கதை குறித்து பேசிய போது, `மன்மதன்’ படத்தில் வந்த `காதல் வளர்த்தேன்’ பாடல் மிகப்பெரிய ஹிட்.. அதனால் மக்கள் அதே போன்ற பாடலை எதிர்பார்ப்பார்கள் என யுவன் சாரிடம் சென்று சொன்னேன். `என்ன பண்ணலாம்?’ எனக் கேட்டேன்.. `பண்ணிடலாம்’ என்றார்.. அந்த காட்சியின் சிச்சுவேஷனை அவரிடம் விவரித்தேன். பிறகு பாடலைத் தொடங்கினோம்.. முதலில் அந்தப் பாட்டுக்கு `காதல் வராதா’ என்று தொடக்கம் வைத்திருந்தோம்.. `என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா?’ என்று எழுதினேன். `காதல் வளர்த்தேன்’ மாதிரியே, `காதல் வராதா?’ என்பது புதிதாக இருக்கும் என யுவன் சாரிடம் தெரிவித்தேன்.. அவரும் ஏற்றுக் கொண்டார்.. `காதல் வளர்த்தேன்’ பாடலில் `ஏ புள்ள புள்ள புள்ள’ என்று பாடியிருப்பேன். காதலிக்கும் பெண்ணை எப்படி அழைப்பது என்பதை அதற்காக யோசித்தோம்... நான், யுவன் சார், உதவி இயக்குநர்கள் என ஸ்டூடியோவில் சுமார் 15 பேர் ஷூட்டிங் முடித்துவிட்டு வந்திருந்தோம்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `ஒவ்வொருவரும் ஒன்றொன்றாக பகிர்ந்தார்கள்.. உயிரே, மணியே, முத்தே என்று பதில்கள் கிடைத்தன.. ஒரு பையன் தனது காதலியை `ஹனி’ எனக் கூப்பிடுவதாக சொன்னான். `ஹனி’ நன்றாக இருந்தது. அதை யோசித்தோம்.. ஆனால் அது ரொம்ப ஸ்டைலாக இருப்பதாகத் தோன்றியது. ஒருவர் `அம்மு’ என்றார்.. அதை `ரொம்ப லோக்கலாக இருக்கு’ என்றோம்.. மற்றொருவர் புஜ்ஜுமா என்றார்.. `அது நாய்க்குட்டியைக் கூப்பிடுவதைப் போல இருக்கிறது’ என்று சொன்னோம். இந்த மாதிரியான உரையாடலின் நடுவில் நான் யுவனிடம் நான் `லூசு’ன்னு தான் சார் கூப்பிடுவேன் எனச் சொன்னேன்.. யுவன் சிரித்தார். எல்லாரும் சிரித்தார்கள்.. `லூசுப்பெண்ணே.. உன் மேல லூசாக சுத்துறேன்’ என்று சொல்ல கூடாதா?’ என்று கேள்வி எழுப்பினேன். `பெண்ணை மட்டும் லூசுன்னு சொல்றே’ அப்படின்னு சொல்வாங்க என்றார்கள்.. அப்படியென்றால், `லூசுப் பெண்ணே.. லூசுப்பையன் உன்மேல லூசா சுத்துறான்’ என்று சொன்னேன். `ஓகே’ சொன்னார்கள்.’ எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், `முதல் லைன் `காதல் வராதா’ என்று தான் இருந்தது.. அதன்பிறகு தான் `லூசுப்பெண்ணே’ வரும்.. அப்போது நான் யுவன் சாரிடம் இதைச் சொன்னேன்.. அதை மாற்றிக் கொள்ளலாம் எனக் கேட்ட போது, யுவன் என்னிடம் `ஏன்?’ எனக் கேட்டார்.. `காதல் வராதா’ என்று தொடங்கினால் `காதல் வளர்த்தேன்’ மாதிரியே பாடல் போட்டிருக்கும் என்று சொல்வார்கள். அதனால் `லூசுப் பெண்ணே’ முதலில் போட்டோம். பாட்டை முழுவதுமாக முடித்தோம்’ எனத் தெரிவித்தார்.
நடிகர் சிம்பு, `அடுத்த நாள் காரில் செல்லும் போது பாடல் கேவலமாக இருக்கிறதோ என்ற உணர்வு இருந்ததால், யுவன் சாரிடம் பேசினேன்.. இதைச் சொன்னேன்.. `லூசுப் பெண்ணே, லூசுப் பையன்னு இருக்கிறது கேவலமா இருக்குமே சார்’ என்றேன். ஹிட்டாகதோ என்ற பயம் வருவதாக அவரிடம் சொன்னேன்.. அவரும் `ஆம்.. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அதை மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். மறுநாள் மாலை பாட்டை மாற்றிவிடலாம் என இருந்தோம்.. மறுநாள் காலையில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது, வெயிலில் இருந்து தப்பிக்க காரில் அமர்ந்திருந்தோம். அப்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.. கனல் கண்ணன் மாஸ்டர் வந்தார். அவரிடம் நடந்ததைக் கூறினேன்.. அவர் பாடலைக் கேட்க வேண்டும் எனக் கேட்டார்.. பாடலைப் போட்டவுடன் கொண்டாடித் தீர்த்தார்.. எல்லாரும் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள்.. பலரும் இந்தப் பாடலை வெளியிட வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் கனல் கண்ணன் மாஸ்டருக்கு முதலில் ஒரு உணர்வு ஏற்பட்டதே.. அதற்காகத்தான் அந்தப் பாடலை வெளியிட்டோம்’ என்று கூறினார்.