R J Balaji Birthday: நல்ல பையன்தான் வாய்தான் கொஞ்சம் ஓவரு... சினிமாவில் நின்று விளையாடும் ஆர்.ஜே பாலாஜிக்கு பிறந்தநாள்
நம் அனைவருக்கும் பேஷன் என்று ஒன்று இருக்கிறது. சில நேரங்களில் நமக்கு என்ன வேண்டும் என்று நமக்கே தெரிவதில்லை. அது தெரிவது வரை நாம் என்ன செய்யலாம். ஆர். ஜே பாலாஜியைப் பார்த்துக் கற்றுக்கொள்வோம்
சமூக ஆர்வலர், கிரிக்கெட் வர்ணனையாளர் , ஆர். ஜே. , நடிகர், பாட்லாஸ்டர் இயக்குநர் என தசவதாரம் கமலுக்கே ஈடுகொடுக்கும் ஆர்.ஜே பாலாஜிக்கு இன்று பிறந்தநாள். ஊரில் இருக்கும் அனைவரையும் க்ராஸ்டாக் வழியாக கலாய்க்கும் அவருக்கு அவர் ஸ்டைலில் ஒரு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.
ஆர் ஜே ஆகலாம்
தனது கல்லூரி படிப்பை முடித்த ஆர் ஜே பாலாஜி உடகவியலாளராக ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறார். கல்லூரி ஹாஸ்டல் கேண்டீன் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்லி பாலாஜியிடம் கேட்டுக்கொண்டபோது 56 வார்த்தைகள் கொண்ட அந்த கட்டுரையில் 47 வார்த்தைப் பிழைகள் இருந்தனவாம். இது நமக்கு செட் ஆகாது என்று அப்படியே ஒதுங்கிவிட்டார் பாலாஜி. பிறகு மிர்ர்சி எஃப் எம் இல் ரேடியோ ஜாக்கி வேலைக்காக ஆடிஷன் சென்றிருக்கிறார். அங்கு செல்வதுவரை ஆர். ஜே வேலை எதைப்பற்றியது என்கிற ஐடியா சுத்தமாகவே அவருக்கு கிடையாது. இப்படியாக ஆர். ஜே ஆனார் பாலாஜி. இவரது ஆர் ஜே பயணத்தைப் பற்றி தனியாக ஒரு புத்தகமே போடும் அளவிற்கான அனுபவத்தை வைத்திருக்கிறார் பாலாஜி.
மன்னிப்பு கேட்பது நல்ல பழக்கம்
அவ்வப்போது கொஞ்சம் தேசப்பற்றாளராக, சமூக அக்கறைக் கொண்டவராகவும் இருக்கலாம். சரி என்று நம்புவதை பேசலாம். தவறாக இருந்தால் மன்னிப்புக் கேட்டு திருத்திக் கொள்ளலாம் இது அவரது பாலிசி.
நடிகர் – காமெடியன்
ஆர்.ஜே வாக மக்களிடையே பிரபலமான பாலாஜி, தீயா வேலை செய்யனும் குமார் திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து வாயை மூடி பேசவும் , இது என்ன மாயம், நானும் ரெளடி தான், காற்று வெளியிடை ஆகியத் திரைப்படங்களில் நடித்தார் பாலாஜி.
கதாநாயகன்
காமெடியனாக நடிக்க போர் அடித்துவிட்டதாலோ என்னவோ கதா நாயகனாக நடிக்க முடிவு செய்தார் பாலாஜி. எல்.கே.ஜி படத்தின் ஹீரோவாக நடித்தார் ஆர்,ஜே. பாலாஜி. சமகால அரசியலை பகடிசெய்யும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தியில் வெளியான பதாய் ஹோ திரைப்படத்தின் ரீமேக்கான வீட்ல விசேஷம் மற்றும் ரன் பேபி ரன் ஆகியவை சமீபத்தில் வெளியானத் திரைப்படங்கள்.
இயக்குநர்
விட்டத்தைப் பார்த்து வாழ்க்கையைப் பற்றி மிகத்தீவிரமாக தத்துவ விசாரனை செய்து கொண்டிருக்கும்போது ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்தது. நயந்தாராவுடன் இணைந்து நடித்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிநார். படம் ஊத்திக்கொண்டது. இன்னும் பயிற்சி வேண்டுமோ என்று பாலாஜி டைரக்ஷனில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருக்க முடிவு செய்தார் பாலாஜி.
கிரிக்கெட் வர்ணனையாளர்
கிரிக்கெட் வர்ணனையாளராக மாற கிரிக்கெட்டைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எல்லாம் இல்லை. ஃபோர் அடிக்க ஹுடி பாபா மந்திரம், வீரர்களுக்கு சினிமாப் பெயர்கள் மற்றும் பிஜிஎம் போடத் தெரிந்தால் போதுமானது. அவ்வப்போது கொஞ்சம் கிரிக்கெட் . ஏன் இது நன்றாக இல்லையா என்று கேட்டால்.. நல்லாருக்கு ஆனா……
விளையாட்டுச் சிறுவன்
லொடலொட வென்று பேசும் ஒரு விளையாட்டுச் சிறுவனாக சில நேரங்களில் தோன்றும் ஆர் ஜே பாலாஜி அடிக்கடி சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர்களை சொல்லி நாம் கேட்டிருப்போம் உதாரணத்திற்கு பொட்டிவாக்கம் , பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம் என ஒரு வரிசையை அடுக்கிக் கொண்டு போவார். ஏன் சென்னையின் இத்தனை ஊர்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்கிறார்….
ஒரு செண்டிமெண்ட் டச்
பாலாஜியின் சிறிய வயதில் அவரது தந்தை அவரை விட்டுச் சென்றுவிட்டார் . தனது தாயின் வளர்ப்பில் வளர்ந்த பாலாஜி தனது நான்கு உடன்பிறப்புகளுடன் வளர்ந்தவர். அவரது அம்மாவின் வேலைக் காரணமாக தொடர்ந்து வீடுகள் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள் . சென்னையில் மட்டுமே கிட்டதட்ட 24 வீடுகள் 11 பள்ளிகள் மாறியிருக்கிறாராம். ஒருவேளை அந்த விளையாட்டுச் சிறுவனுக்கு பெரும்பாலான நினைவுகளாக இருப்பதெல்லாம் ஊர்களின் பெயர்கள் தானோ என்னவோ. பிடித்ததை செய்ய விரும்புபவர்கள் ஆர்.ஜே. பாலாஜியையும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ளலாம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தசாவதாரமே.