Actor Ranjith: "படம் வெளியாவதில் பெயர் சொல்ல முடியாத சிலர் இடையூறாக இருந்தனர்" - ரஞ்சித் பரபரப்பு பேட்டி
கவுண்டம்பாளையம் ஒரு சட்டமன்ற தொகுதி இதுபோல கவுண்டம்பாளையங்கள் கொங்கு மண்டலத்தில் உள்ளது. இது ஜாதி படமில்லை என ம் விளக்கம்.
நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் சேலம் அருகே உள்ள கருப்பூர் திரையரங்கில் இன்று திரையிடப்பட்டது. இதில் அப்படத்தை இயக்கி நடித்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: படத்தை பொதுமக்களுடன் அமர்ந்து பார்த்தது சந்தோஷமாக உள்ளது. இதைவிட சந்தோசம் வேறு என்ன இருக்கிறது. எளிய கலைஞர் மக்கள் எனக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும். இந்தப்படம் நேர்மையான படம். தாய்மார்கள் பார்க்க வேண்டிய படம். பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு படம் எடுத்துள்ளேன்.
நாடகக் காதலுக்கு எதிராக படம் எடுத்துள்ளேன். இதற்கு எதிர்ப்பு வந்து கொண்டு தான் உள்ளது. இருப்பினும் படம் வெளியானது சந்தோஷமாக இருக்கிறது. ஜூலை 5ஆம் தேதி படம் வெளிவரும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் பல காரணங்களால் படம் தாமதமாக வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் வன்மம் இருக்காது. அரசு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்தப் படம் ஏ சர்டிபிகேட் படமாகும். நான் நேர்மையாக இருக்கிறேன். மக்களை நம்பி உள்ளேன். படம் வெளியாவதில் பெயர் சொல்ல முடியாத சிலர் இடையூறாக இருந்தனர். எதிர்த்து முதுகில் குத்துகிறார்கள். நான் நல்ல கருத்துக்களை தான் தெரிவித்துள்ளேன். தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான கருத்துக்களை கூறியிருக்கிறேன். சிறிய தயாரிப்பாளர்களை நசுக்க கூடாது. இந்த படம் திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ஒரு சில தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பிரச்சனைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுக்க வேண்டும். கவுண்டம்பாளையம் ஒரு சட்டமன்ற தொகுதி இதுபோல கவுண்டம்பாளையங்கள் கொங்கு மண்டலத்தில் உள்ளது. இது ஜாதி படமில்லை. கொங்கு மண்டலத்தில் ஊருக்கு ஆயிரம் கவுண்டன்பாளையம் இருக்கும். சிறிய பட்ஜெட் படம். 100 படங்களில் நடித்துள்ளேன் இந்தப் படத்தை இயக்கி நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆணவ படுகொலை என்பது நேரடியாக நடக்கும்போது பெற்றோர்களுக்கு அந்த வலி இருக்கும். சாதாரணமாக ஒரு வண்டியை திருடி சென்றான் உடனடியாக கோபத்தில் அவரை அடிப்பது. ஒரு செருப்பு காணாமல் போனால் கூட கோபப்படுகிறோம். தங்களது வாழ்க்கையே தங்களது பிள்ளைதான் என்று இருப்பவர்கள், அந்தக் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் வகையில் இருக்கும்போது பெற்றோர்களுக்கு வரும் கோபம் வன்முறை அல்ல, கலவரம் இல்லை. எது நடந்தாலும் அது அக்கறையின் காரணமாக நடக்கிறது. அது எனக்கு குற்றமாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.