ரஜினிக்கு இப்படிப்பட்ட ரசிகர்களா? என்ன பண்ணியிருக்காங்க பாருங்க...?
மயிலாடுதுறையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளினை முன்னிட்டு அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து அவரது ரசிகர்கள் சார்பில் ஏழை எளியவருக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.
ரஜினியின் 74 வது பிறந்தநாள்
இந்திய திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. 1950-ம் ஆண்டு டிசம்பர் 12 -ம் தேதி பெங்களூரில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த் பிறந்தார், சினிமா உலகில் நுழைவதற்கு முன்பு பெங்களூரு போக்குவரத்து துறையில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தார். அப்போதே தனது தனித்துவமான ஸ்டைலான பாவனைகள் மூலம் பலரின் கவனத்தையும் பெற்றவர். பின்நாளில் சினிமா ஆளுமையாக வருவதற்கான அனைத்து பண்புகளும் அவருக்கு இருந்துள்ளது.
சினிமாவில் அறிமுகம்
அதனைத் தொடர்ந்து 1973-ம் ஆண்டு தனது நடிப்புத் திறனை அதிகரிப்பதற்காக மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார். அதன் மூலம் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. 1975-ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார் ரஜினிகாந்த். இந்த படத்தின் மூலம் தான் சிவாஜி ராவுக்கு ரஜினிகாந்த் என்ற திரைப் பெயர் வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் துணை கதாபத்திரங்கள், வில்லன் காதிபத்திரங்களில் நடித்து வந்த ரஜினி, தனது தனித்துவமான பாணி மற்றும் ஸ்டைலிஷ் நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை பெரியளவில் கவர்ந்தார்.
1978-ல், ரஜினிகாந்த் தனது முதல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது பைரவி, அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. அவரது முத்திரை சைகைகள், சிகரெட்டை சுழற்றுவது, அவரது வேகமான நடை, அவரது ஆளுமைக்கு ஒத்ததாக மாறியது. முள்ளும் மலரும், ஆறிலிருந்து அருபது வரை, மூன்று முகம் போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரது நிலையை உறுதிப்படுத்தின.
ரஜினிகாந்தின் வாழ்க்கையில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்தஸ்தைப் பெற்ற ஏராளமான படங்கள் உள்ளன. பாஷா, பாஷாவாக டான் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினியின் நடிப்பு இன்றும் பேசப்படும் ஒன்று. சிவாஜி திரைப்படம் இயக்குநர் எஸ்.ஷங்கர் இயக்கத்தில் நடித்தது உலகளவில் அவரின் புகழை உயர்த்தியது, அந்த நேரத்தில் ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரஜினி. எந்திரன் மற்றும் அதன் தொடர்ச்சி 2.0 போன்ற அடுத்தடுத்த வெற்றிகள் அவரது பல்துறைத்திறனை வெளிப்படுத்தி, சினிமாவில் அவரது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.
மயிலாடுதுறையில் கொண்டாட்டம்
இத்தகைய புகழ் பெற்ற தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இவருக்கு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 74 ஆவது பிறந்த தினத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகர ரஜினி நற்பணி மன்றம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சுவாமிக்கு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து ரஜினி பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.