‛பாரதிராஜாவின் படத்தில் இருந்து பாதியில் வெளியேறினேன்’ காரணத்தை உடைத்த நட்டி!
இயக்குநர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு தனக்கு எப்படி மிஸ்ஸானது என்பதையும் பகிர்ந்திருந்தார்.
நிர்மல் குமார் மற்றும் ஹச்.வினோத் கூட்டு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படத்தில் நட்டி என அழைக்கப்படும் நடிகர் நடராஜன் சுப்ரமணியன் நடித்திருந்தார். 2002 ஆம் ஆண்டு யூத் திரைப்படத்தில் அறிமுகமான நடராஜன் அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் , வில்லன் , ஹீரோ என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் உடனான ‘ச்சாய் வித் சித்ரா’ நேர்காணலில் தனது திரைப்பட அனுபவங்களை அண்மையில் பகிர்ந்திருந்தார் அவர். குறிப்பாக இயக்குநர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு தனக்கு எப்படி மிஸ்ஸானது என்பதையும் பகிர்ந்திருந்தார்.
அந்த பேட்டியில் இருந்து சில பகுதிகள், ‘பொம்மலாட்டம் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது சுவாரசியமான கதை. பாரதிராஜா சாரை நான் நேரடியாகப் பார்த்தது கிடையாது. பொம்மலாட்டம் படத்தில் நடிப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு அழைத்தார். அதே சமயம்தான் நான் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியின் சல்லாபம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். இருந்தாலும் இயக்குநர் இமயத்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது எப்படி அதனை மறுக்க முடியும்? அலுவலகத்துக்கு 10:30 மணிக்கு வரச் சொன்னார் 10:15க்கு எல்லாம் போய் நின்னேன். என்னைப் பார்த்துட்டு உட்காரச் சொல்லிட்டுக் கடந்து போனார். நானும் அமர்ந்திருந்தேன். எதோ எழுதிக்கிட்டே இருந்தார். இரண்டு மணிநேரத்துக்கு மேல ஆனது யாருமே என்னை அழைக்கலை. அப்புறம் அலுவலக்த்தில் இருந்த உதவியாளர்கள் பார்த்துட்டு இயக்குநரிடம் கேட்டார்கள்.
அவர் ,’எப்பா நீதானா அது? முன்னாடியே சொல்லக்கூடாதா?’ எனக் கேட்டுவிட்டு நான் நடிக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் விளக்கினார். அப்புறம் எனக்கு சல்லாபம் படத்தில் கால்ஷீட் இருப்பதை விளக்கினேன். அதைக் கேட்டுவிட்டு ராஜ்குமார் சாருக்கு இவர் கால் செய்தார். அவர் நடித்துக்கொள்ள சொன்னதாக தகவல் கிடைத்தது. சூட்டிங்கும் மூன்று நாட்கள் நடந்தது. அதன்பிறகு திடீரென மூன்றாவது நாள் ராஜ்குமார் சாரிடமிருந்து அழைப்பு. சூட்டிங் ஸ்பாட்டில் காணோமே எங்கே என்று கேட்டார். நான் நீங்கதானே பாரதிராஜா படத்தில் நடிக்க அனுமதி கொடுத்திங்க என்று கேட்டேன். நம்ம படத்தில் எல்லா வேலைகளும் முடித்துவிட்டால் அதில் நடிச்சுக்க சொல்லிச் சொன்னேன். இன்னும் முடியலையே எனவும் நடித்த காட்சிகளை அப்படியே விட்டுவிட்டு சல்லாபம் பட சூட்டிங்குக்குப் போனேன். பாரதிராஜா சார்,’நீ இந்தப் படத்துல இருந்துருக்கலாம்யா!’ என்று ஏக்கத்தோட சொன்னார். நானா படேகர் மாதிரியான நடிகர்களோட நடிக்கும் வாய்ப்பு இப்படித்தான் நழுவிச்சு’ என்றார்.