Kichcha Sudeep: விக்ரமை விட மோசம்.. கிச்சா சுதீப் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
என்னுடைய முதல் படம் முழுவதுமாக ஷூட்டிங் செல்லவில்லை. பாதிலேயே நின்று விட்டது. இரண்டாவது படம் முழு ஷூட்டிங்கும் நடந்த நிலையில் ரிலீசாகவில்லை என கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

தான் சினிமாவின் தொடக்கத்தில் எப்படிப்பட்ட கஷ்டங்களை சந்தித்தேன் என நடிகர் கிச்சா சுதீப் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சையமானவர். அவர் முடிஞ்சா இவனைப் பிடி, நான் ஈ, புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் இயக்குநர் கார்த்திகேயா இயக்கத்தில் மார்க் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நவீன் சந்திரா, தீப்ஷிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 25ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதற்காக கிச்சா சுதீப் மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கிச்சா சுதீப், “என்னுடைய முதல் படம் முழுவதுமாக ஷூட்டிங் செல்லவில்லை. பாதிலேயே நின்று விட்டது. இரண்டாவது படம் முழு ஷூட்டிங்கும் நடந்த நிலையில் ரிலீசாகவில்லை. மூன்றாவது படம் ரிலீசானது. ஆனால் மக்கள் வரவில்லை. தியேட்டர்களில் கார்னர் சீட் மட்டும் தான் நிரம்பியது. ஆரம்பத்தின் சினிமாவில் என்னுடைய நிலையைப் பார்த்து இன்னும் எப்படிடா சினிமாவில் இருக்கிறோம் என்ற எண்ணம் தான் தோன்றியது.
அதன்பிறகு சரியான நேரத்தில் சேது படம் எனக்கு வெளியானது. அந்த படம் கன்னட சினிமாவில் ஏராளமான நடிகர்கள் வேண்டாம் என விலகிய படமாக இருந்தது. படத்தில் ஒரு மாஸ் இல்லை, மொட்டை அடிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அப்படியான சேது படம் தமிழில் வெளியாகும்போது கூட விக்ரம் மிகப்பெரிய நடிகர் இல்லை. அவர் அப்போது சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் பிடிக்க போராடிக் கொண்டிருந்தார்.
என்னுடைய கன்னட சினிமாவிலும் என் நிலை அப்படித்தான் இருந்தது. எல்லாரும் வேண்டாம் என சொன்ன சேது படம் எனக்கு வந்தது. ஷூட்டிங் போனால் 7வது நாளில் படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய விபத்து நடந்தது. ரோப் அறுந்ததால் மூன்று மாடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தேன். கால் உடைந்து விட்டது. மரத்தில் இருந்த தேனீக்கள் ஷூட்டிங்கில் இருந்தவர்களை கொட்டி விட்டது. ஆனால் நான் முழு படத்தையும் முடிக்க முடிவு செய்தேன்.
அந்த படமும் சரியாக போகவில்லை என்றால் ஹோட்டல் பிசினஸை பார்க்க வேண்டும் என அப்பா தெரிவித்திருந்தார். எனக்கு அதுவேறு டென்ஷனாக இருந்தது. விட்டுவிடக்கூடாது என்பதை முடிவு செய்து சேது பண்ணினேன்” என தெரிவித்துள்ளார். கிச்சா சுதீப் சேது மட்டுமல்லாமல் ஆட்டோகிராஃப், சிங்கம் என பல தமிழ் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து வெற்றி பெற்றார். அதனால் அவருக்கு தமிழ் சினிமா மீதும், ரசிகர்கள் மீது எப்போது தனிப்பட்ட மரியாதை, அன்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















