Actor kavin | லிஃப்ட்க்கு அடுத்து ஆகாஷ்வாணி.. வெப்சீரிசில் நாயகனாக நடிகர் கவின்!
நடிகர் கவின் ஆகாஷ்வாணி என்ற புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ரிபெகா மோனிகா ஜான் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர் கவின். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலமாக தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு திரைத்துறையில் தொடர்ந்து வாய்ப்பு வந்தது. அவர் நடிப்பில் வெளியான நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் லிப்ட் என்ற படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது. வினித் வரபிரசாத் இயக்கிய இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ருதா ஐயர் நடித்திருந்தார். ஹாரர் திரில்லர் வகையிலான இந்த படத்திற்கு விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், நடிகர் கவின் மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆகாஷ்வாணி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் வெப் சீரிசாக உருவெடுத்துள்ளது. காதல், காமெடி ரகமாக உருவாகும் இந்த வெப்சீரிசை எனோக் ஆபில் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் அட்லீயிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இந்த வெப் சீரிசிற்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். கலைவாணன் படத்தொகுப்பு செய்ய உள்ளார். ஆகாஷ்வாணி வெப் சீரிசுக்கு குணா பாலசுப்பிரமணியன் இசையமைக்கிறார்.
And it’s a wrap for Akash Vaani! Had a blast working with this young, talented and vibrant team. Much love to each one of you, it was a pleasure ✨ can’t wait for you to witness our story! Coming soon. @Kavin_m_0431 #AkashVaani #itsawrap pic.twitter.com/D9EZhEO3mb
— Reba Monica John (@Reba_Monica) October 8, 2021
இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை ரிபெகா மோனிகா ஜான் நடித்துள்ளார். இவர்கள் தவிர சரத்ரவி, தீபக் பரமேஷ் மற்றும் அபிதா வெங்கட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஓடிடி வெளியீடாக வெளிவர உள்ள இந்த தொடரை கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கவின் மற்றும் இயக்குனர் எனோக் ஆபிலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகை ரிபெகா மோனிகா ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் கவின் விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், சரவணன் மீனாட்சி தொடரில் நாயகனாக நடித்து பிரபலம் ஆனார். பிக்பாஸ் தொடர் அவருக்கு மேலும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது. பின்னர், பீட்சா, இன்று நேற்று நாளை மற்றும் சத்ரியன் படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்தார்.