Karthi : "அந்த மாதிரி நிலைமையில் இருந்து, அப்பா எங்களை கொண்டு வந்திருக்கார்" : அரங்கை அழவைத்த நடிகர் கார்த்தி!
"என்னப்பா 50 ரூபா தானே கேட்டார். நீங்க 100 ரூபா கொடுக்குறீங்கன்னு சொன்னா அந்த நூறு ரூபாய எடுத்துட்டு பொய் அவர் என்ன கோட்டையா கட்ட போறார்", என்பார்.
சென்னையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் 43வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகர் கார்த்தி கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், ஏழையாக இருந்தாலும், எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் வாழ்க்கையில் நினைக்கும் உயர்வை எட்டலாம் எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் கற்பித்தல், கற்றல் ஆகியவற்றை செய்கிறோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே இங்கு பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும். ஆனால் நமது சமூகத்தில் மதிப்பெண்களை நோக்கிதான் கல்விமுறை உள்ளது. என் அக்கா பையன் கூட பயந்துகொண்டே இருந்தான், என்னடான்னு கேட்டால் நாளைக்கு எக்ஸாம் பயமா இருக்கு என்கிறான். மதிப்பெண்ணுக்காக படித்தால் பயம்தான் மிஞ்சும், அறிவை வளர்க்க படிக்க வேண்டும் என்று கூறினார்.
உடலுறுப்பு தானம்
மேலும் பேசிய கார்த்தி அங்கு வந்து பேசிய ஒரு மாணவரை பாராட்டினார். தினம் தினம் இன்ஸ்டாகிராமில் அடுத்தவர் வாழ்வுடன் நம் வாழ்வை கம்பேர் செய்து வாழ்ந்து வரும் நமக்கு இந்த விழாவிற்கு வரும்போது புதிய புதிய வாழ்க்கை பிரச்சனைகளை தெரிந்துகொள்ள முடிகிறது என்றார். அவர் பேசுகையில், "உடலுறுப்பு தானம் குறித்து நாம் பயந்து கொண்டிருக்கும்போது இது போன்ற ஒரு மேடைகளில் அதனை பற்றி பேசியது மிகவும் முக்கியமானது. நாம வீட்டுக்கு போகும்போது முழு உடல் போகும் என்று தெளிவாக கூறினார் அந்த மாணவர். இதனை மேடையில் பேசுவதற்கு என்னைவிட அதிக தைரியம் வேண்டும். இதைத்தான் கல்வி தருகிறது", என்றார்.
சிவகுமார் குறித்து
தனது தந்தையை பற்றி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்ட நடிகர் கார்த்தி அவருடைய உழைப்பினால் தான் நாங்கள் இங்கே நிற்கிறோம் என்று கூறினார். அவர் நம்பிக்கை வைத்து முன்னேற முடியும் என்று உழைத்தார், இல்லையென்றால், நாங்கள் கிராமத்தில் எங்கோ வேலைக்குதான் சென்று கொண்டிருந்திருப்போம் என்றார். மேலும் பேசிய அவர், "அப்பா இல்லாமல் வளர்வது மிகவும் கஷ்டமான விஷயம். எங்க அப்பா வளரும்போது அப்பா இல்ல, அப்பா இல்லாம தான் இவ்வளவு தூரம் எங்களை கொண்டு வந்தார். எங்கப்பா படிக்கும்போது அவங்க அம்மாதான் படிக்க வச்சாங்க. காலேஜ்லாம் படிக்கும்போது 80 ரூபாய்தான் கொடுப்பாங்க. அதுல இருந்து இந்த நிலைக்கு வந்திருக்கார்", என்றார்.
பணம் மகிழ்வை தருமா?
பணம் குறித்து தந்தை சிவகுமார் சொல்லித்தந்ததை பகிர்ந்த அவர், "நாங்க ரயில்வே ஸ்டேஷன் போகும்போது போர்ட்டர்கள் இருப்பாங்க. அவங்ககிட்ட எவ்ளோன்னு கேட்டா 50 ரூபான்னு சொல்லுவாங்க. நமக்கு ஆச்சர்யமா இருக்கும், 20 ரூபா கொடுக்க வேண்டிய இடத்துல 50 ரூபா சொல்லுவாங்க. அப்பா சரி வாங்கன்னு கூட்டிட்டு வந்துட்டு 100 ரூபா கொடுப்பாங்க. என்னப்பா 50 ரூபா தானே கேட்டார் நீங்க 100 ரூபா கொடுக்குறீங்கன்னு சொன்னா அந்த நூறு ரூபாய எடுத்துட்டு பொய் அவர் என்ன கோட்டையா கட்ட போறார். வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போவார், குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிட்டு போவாரு என்பார். பணம் எப்போதுமே சந்தோஷத்தை கொடுக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படி இல்லை, மத்தவங்களுக்கு கொடுத்து பாருங்க. அது அவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும். நம்ம கிட்ட இருக்குற பணம் மத்தவங்க கிட்ட போகுறப்ப அதோட மதிப்பு கூடுது" என்றார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்