Mari Selvaraj - Karthi : மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி...இது வேற மாதிரியான சம்பவமா இருக்கப்போகுது மக்களே...
மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் சாதிய அரசியல் பற்றிய புதிய விவாதங்களை தொடங்கி வைத்தவர் மாரி செல்வராஜ். கர்ணன் , மாமன்னன் , சமீபத்தில் வெளியான வாழை என இவரது படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு பக்கம் பா ரஞ்சித் ஒற்றை ஆளாக தமிழ் சினிமாவில் சாதிக்கு எதிரான அரசியலை தனது படங்களில் பேசி வந்த நிலையில் தற்போது மாரி செல்சராஜ் தனக்கான ஒரு பெரிய விவாத களத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். வெறும் அரசியலாக மட்டுமில்லாமல் ஒவ்வொரு அசலான மனித உணர்வுகளை தேர்ந்த திரைக்கதையின் வழியாக சொல்ல முயற்சித்து வருவதே அவரை ஒரு கலைஞனாக உயர்த்திக் காட்டும் அம்சம் எனலாம். சமீபத்தில் வெளியான வாழைத் திரைபடமும் அப்படியான முயற்சியே. சிறிய பட்ஜெட்டில் உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் ஏற்பை பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி இருக்கிறது.
தற்போது மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவர் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் நடிகர் கார்த்தியுடன் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சார்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் படத்தில் கார்த்தி
பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து நல்ல படைப்பாளிகளை அடையாளப்படுத்தி வரும் தயாரிப்பு நிறுவனம் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ். கார்த்தி முன்னதாக நடித்த தேவ் , சர்தார் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படமும் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவானதே. அடுத்தபடியாக கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படத்தையும் தயாரித்து வருகிறது. பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லக்ஷ்மன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
" எங்களுடைய அடுத்த படமும் கார்த்தியுடன் தான். மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு ப்ராஜெக்ட். இந்த படத்திற்கான கதை விவாதம் நடந்தபோதே கார்த்தி உடனே நாம் படத்தை பண்ணலாம் என்று சொன்னார். கார்த்தியின் ஷெட்யூல் பொறுத்து இந்த படத்தை தொடங்க இருக்கிறோம். விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் " என அவர் தெரிவித்துள்ளார்.
கிராமத்து கதைக்களங்கள் என்றாலே கார்த்தி வேறு ஒரு அவதாரம் எடுத்துவிடக் கூடியவர். சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்திலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் மாரி செல்வராஜ் கதையின் நாயகனாக கார்த்தி நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு விருந்து தான்.