Ponniyin Selvan 2: 'காலேஜ் ஃபேர்வெல் மாதிரி இருக்குது' .. பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் கார்த்தி நெகிழ்ச்சி..!
எல்லா மாநிலத்திலேயும் சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் இருக்குன்னா, நமக்கு பொன்னியின் செல்வன் படம் இருக்குது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
எல்லா மாநிலத்திலேயும் சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் இருக்குன்னா, நமக்கு பொன்னியின் செல்வன் படம் இருக்குது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் "பொன்னியின் செல்வன்” நாவல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய்,ஜெயராம், ஷோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான நிலையில், இரண்டாம் பாகம் நாளை உலகமெங்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா உள்ளிட்ட பலரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
நெகிழ்ச்சியாக பேசிய கார்த்தி
இந்நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, “நான் மணிரத்னம் ஆபீஸில் வேலை செய்தபோது எக்ஸல் ஷீட்டா பொன்னியின் செல்வனை பார்த்திருக்கேன். அது ஒன்னுமே புரியலை. எவ்வளவோ ஹீரோக்கள் பண்ணனும்ன்னு ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கேரக்டர் எனக்கு கிடைச்சி, அதை முழுசா செய்ததையே நான் பாக்கியமாக நினைக்கிறேன். வந்தியத்தேவனை நீங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்கன்னு எவ்வளவோ பேர் சொல்றப்ப சந்தோஷமா இருக்கு.
இதுவரை பொன்னியின் செல்வன் எங்களுடையது. இனிமேல் அது உங்களுடையது. கிட்டதட்ட 3 வருஷம் இந்த படத்துக்காக செலவிட்டது ஒரு காலேஜ் வாழ்க்கை மாதிரி தான் இருக்குது. இந்த படத்துல நடிச்சவங்க, அதிகமான அன்போட, ஒன்றாக இருக்கிறோம். எனக்கு ஜெயம் ரவி மேக்கப் போட்டு வந்தப்ப பொறாமை வரலை. கிட்ட இருந்து அவரை ரசிக்கிற மாதிரி தான் இருந்துச்சு” என தெரிவித்தார்.
மணிரத்னத்தின் கனவுப்படம்
மேலும், “ப்ரோமோஷனுக்கு போறப்ப எல்லோரும் நாங்க பேஷன் ஷோ மாதிரி இருக்குதுன்னு சொல்றாங்க. நாங்க தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்துறோம். அது எப்படி இருக்க வேண்டும். எல்லா மாநிலத்திலேயும் சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் இருக்குன்னா, நமக்கு பொன்னியின் செல்வன் படம் இருக்குது. அதை தூக்கிட்டு போய் நிறுத்தும்போது வானளவு இருக்க வேண்டாமா, அந்த ஆர்வத்துல தான் பண்ணுனோம்.
இது இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் . ஆனால் கேட்டால் இது கனவுப்படம் என்பதையே சொல்லமாட்டார். ராஜராஜசோழனை காட்சிப்படுத்த அவர் எடுத்த மெனக்கெடலை நேரில் பார்த்துள்ளேன். காலத்திற்கும் இப்படம் நிற்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இந்தப் படத்தில் நான் ஒருபகுதியாக இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி.
இதனை பார்க்கும்போது காலேஜ் ஃபேர்வெல் பார்ட்டி போல இருக்கிறது. மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. வீட்டிலிருந்த பெண்களை அதிகாலை முதல் காட்சிக்கு பசங்க கூட்டிட்டு வந்தாங்க. முதல் பாகம் திருவிழா போல இருந்துச்சு.நாளைக்கு படம் ரிலீசாக போகுது. அதனால இன்னைக்கே திருவிழா கலை வந்துடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்குது” என தெரிவித்தார்.