Karthi: விவசாயியா இருக்குறது கஷ்டம்பா..ஒரே நாளில் எல்லாம் போச்சு.. சோகத்துடன் பேசிய நடிகர் கார்த்தி..!
விவசாயத்திற்கு ஆதரவு தருகிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நாமும் அதை செய்ய வேண்டும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
பெரிய தாராள மனசும், அன்பும் இருந்தால் மட்டுமே விவசாயியாக இருக்க முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொதுவான விவசாயம் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் வேளாண்துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. என்னோட மனைவியும் இந்த துறையில் ஒரு மாணவி என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
அவரின் அப்பா ஒரு விவசாயி தான். ஆனால் சென்னையில் வந்து விவசாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரு பள்ளி தேவைப்படுகிறது. அப்படித்தான் இந்த பள்ளியின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஒரு 6 மாதம் பயிற்சி பெற்றார். ஒருநாள் என்னையும் அழைத்துச் சென்றார்.
அங்க எனக்கு அவ்வளவு சந்தோசமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. நம்முடைய நாட்டு ரக அரிசியை பயிரிட்டு இருந்தார்கள். கிட்டதட்ட 200 வகை அதில் இருந்தது. நானும் ரஞ்சனியும் என் மகள் உமையாழையும், மகன் கந்தனையும் இந்த பள்ளியில் சேர்த்து விட்டுடலாமா என யோசித்தோம். ஏனென்றால் விவசாயம் ஒரு வாழ்க்கை முறை. அது நம்முடைய தினசரி வாழ்க்கையில் இருந்த ஒரு விஷயம். அதை விட்டுவிட்டு ரொம்ப தூரம் தள்ளி வந்துட்டோம்.
கடைக்குட்டி சிங்கம் படம் நடிக்கும்போது தான் நான் மீண்டும் விவசாயத்தை நோக்கி ஆர்வமாக போனேன். அப்படத்தில், ‘நீங்க என்ன வேண்டுமானாலும் படிங்க. ஆனால் விவசாயமும் படிங்க’ என்ற வசனம் இருக்கும். இன்றைக்கு எல்லா விளைநிலங்களும் தோப்பா மாறிட்டு இருக்கு. வணிகம் சார்ந்த விஷயமாக மாற்றி விட்டார்கள்.
ஒரு பெரிய தாராள மனசும், அன்பும் இருந்தால் மட்டுமே விவசாயியாக இருக்க முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொதுவான விவசாயம் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும். நானும் விவசாயம் பண்ண முயற்சி பண்ணேன். ஏனென்றால் விவசாயத்திற்கு ஆதரவு தருகிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நாமும் அதை செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையான கஷ்டம் தெரியும் என முயற்சி செய்தேன்.
ஒருநாள் மருந்தடிக்க காலதாமதமாகி விட்டது. அதனால் மொத்தமாக எல்லா காய்கறியும் அழிந்து விட்டது. கிட்டதட்ட குழந்தை வளர்ப்பது மாதிரி தான். கண்ணுக்குள்ளேயே வைத்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அதிலும் இயற்கை விவசாயம் ரொம்ப ரொம்ப கஷ்டம். அதற்கு நிறைய அனுபவம் வேண்டும். அப்பதான் நான் விவசாயிகள் பற்றி நினைத்து பார்த்தேன். நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கார்கள்.
ரஞ்சனி அவங்க அப்பாகிட்ட நான் விவசாயம் கத்துக்கிட்டு இருக்கேன் என படிப்பதை பற்றி சொன்னார்கள். அதற்கு அவரது அப்பாவோ, நீ இங்க வந்து வயலில் வேலை செய்திருக்கலாமே என கூறினார்கள். இந்த விவசாய அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது சிறப்பானது” என அந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசினார்.