Harish Kalyan: அடுத்த கிரிக்கெட் கதை: லப்பர் பந்து வீச்சாளராக ஹரிஷ் கல்யாண்: பிறந்தநாள் பரிசாக வெளியான அப்டேட்!
Harish Kalyan Next Movie: நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் லப்பர் பந்து படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது
ஹரிஷ் கல்யாண்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan). ஹரிஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமான 'சிந்து சமவெளி' என்ற முதல் படமே சர்ச்சையில் சிக்கியது. அதன் பாதிப்பு அவரை மூன்று ஆண்டுகள் வரை முன்னேற விடாமல் தடுத்தது. இதன் பிறகு பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்ட பின் ஹரிஷ் கல்யாண் மீண்டும் கவனம் குவிந்து வாய்ப்புகள் அதிகரித்தன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் சக போட்டியாளரான ரைசா வில்சன் உடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்து இருந்தார். அப்படம் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்ற வெற்றிப்படமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்த மாறுபட்ட காதல் கதையை கொண்டு வெளிவந்த வந்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படமும் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. 2020ஆம் ஆண்டு வெளியான 'தாராளப் பிரபு' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வந்தது. ஆனால் திடீரென வந்த கொரோனாவால் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று பயங்கரமான ஒரு வெற்றியை பெற்றது.
தொடர்ச்சியாக கசட தபற, ஓ மணப்பெண்ணே, லெட்ஸ் கெட் மேரீட் உள்ளிட்ட பல படங்கள் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி இருந்தாலும் பெரிய அளவில் அவை வரவேற்பைப் பெறவில்லை. கடந்த ஆண்டு வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் விமர்சனரீதியாக வெற்றி பெற்றதுடன் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு பாராட்டுகளைக் குவித்தது. தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடிக்கும் ஹரிஷ் கல்யாண் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் லப்பர் பந்து படத்தில் இருந்து ஒரு சிறு முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
லப்பர் பந்து
Glimpse of HarishKalyan from #LubberPandhu 🏏
— AmuthaBharathi (@CinemaWithAB) June 29, 2024
He plays the character of Anbu 🌟pic.twitter.com/FVXQFvvgPL
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் லப்பர் பந்து. இவர் அருண்ராஜா காமராஜா இயக்கிய நெஞ்சுக்கு நீதி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளார்களாம். வதந்தி வெப் சீரிஸ் மூலம் கவனமீர்த்த சஞ்சனா மற்றும் ஸ்வாசிகா விஜய் , பால சரவணன் , காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் அன்பு என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு கபில் தேவ் மாதிரி , மும்பை இந்தியன்ஸுக்கு பொலார்டு மாதிரி , சென்னை சூப்பர் கிங்ஸ்கு பிராவோ மாதிரி எங்கள் அணிக்கு அன்பு என்று ஹரிஷ் கல்யாணுக்கு மாஸான அறிமுகமாக இருக்கிறது இந்த வீடியோ. லப்பர் பந்து படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.