இப்டியெல்லாம் அசிங்கபடுத்தாதீங்க...ரொம்ப கஷ்டபட்டு வந்திருக்கேன்...கண் கலங்கிய ஹரிஷ் கல்யாண்
Harish Kalyan : ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் படம் இந்த தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது

இந்த தீபாவளியை முன்னிட்டி இளம் நடிகர்களின் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. இதில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் படமும் ஒன்று. டீசல் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது படம் தொடர்பாக தான் எதிர்கொண்ட அவமானங்களை ஹரிஷ் கல்யாண் பகிர்ந்துகொண்டு உணர்ச்சிவசமாக பேசினார்.
டீசல்
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் டீசல். அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடித்து கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்பெற்றதுடன் 3 தேசிய விருதுகளை வென்றது. தற்போது டீசல் திரைப்படமும் ஹரிஷ் கல்யாணின் கரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் டீசல் படம் தொடர்பாக தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
தீபாவளிக்கு வெளியாக என்ன தகுதி இருக்கு
ஹரிஷ் கல்யாண் பேசியதாவது " ஒரு சில நாட்களுக்கு முன்பு டீசல் படத்தின் தயாரிப்பாளரிடம் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக என்ன தகுதி இருக்கு. படத்தின் பெரிய ஹீரோ இருக்காங்களா , பெரிய இயக்குநர் இருக்காறா , பெரிய இசையமைப்பாளர் இருக்கிறாரா என்று ஒருவர் கேட்டுள்ளார்கள். அதை கேட்டு அவர் ரொம்ப மனமுடைந்து போய்விட்டார். அதை என்னிடம் சொன்னபோதும் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. தீபாவளிக்கு வெளியாக என்ன தகுதி வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நல்ல கதை அதை ப்ரோமோஷ் செய்ய நல்ல குழு , அந்த படத்திற்கு பின் ஒரு நல்ல குழு இருந்தால் கண்டிப்பா வரலாம்தான. அஜித் , விஜய் போன்ற ஸ்டார்களின் படங்களை நான் தீபாவளிக்கு பார்த்து கொண்டாடி இருக்கிறேன். இப்போது என்னுடைய படம் தீபாவளிக்கு வெளியாவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு மரத்தை வைத்து ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு தீக்குச்சியை வைத்து மொத்த காட்டையும் அழித்துவிடலாம். அதனால் யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் யாரையும் அவமானப்படுத்தாதீர்கள். நிறைய கஷ்டங்களை கடந்து தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதை எல்லாம் நான் சொல்லி அனுதாபம் தேட விரும்பவில்லை. " என ஹரிஷ் கல்யாண் பேசியுள்ளார்





















