நகைச்சுவை பட்டாளத்துடன் மீண்டும் ஹீரோவாக ரீஎண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி!
கவுண்டமணியுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை, எதிர்நீச்சல் ஜான்சி ராணி, கூல் சுரேஷ், சென்றாயன், சதீஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்
ஹீரோவாக கவுண்டமணி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டாடப்படும் ஒரு காமெடி நடிகர் கவுண்டமணி. 80, 90 கால கட்டத்தில் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். செந்தில், கவுண்டமணி காமெடிக்காகவே படத்தை பார்த்தவர்கள் என ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கவுண்டமணியின் கமெடியை ரசிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். ஒரு கட்டத்துக்கு மேல் நடிப்பதை நிறுத்தி கொண்ட கவுண்டமணி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
2016ம் ஆண்டு கவுண்டமணியின் நடிப்பில் வெளி வந்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ‘ படத்தில் ஹீரோவக ரீ எண்ட்ரி கொடுத்து அசத்தினார். அடுத்த படத்தில் அவர் நடிப்பாரா என எதிர்பார்த்த போது மீண்டும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், ஒரு முழு நீள காமெடி படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முழுவதும் நகைச்சுவையை வைத்து எடுக்கப்படும் படத்தில் காமெடி கிங் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார் என்றும் அதற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சாய் ராஜகோபால் இயக்குகிறார். இதில் கவுண்டமணியுடன் இணைந்து யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை, எதிர்நீச்சல் ஜான்சி ராணி, கூல் சுரேஷ், சென்றாயன், சதீஷ் உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திர பட்டாளமே நடிக்க களமிறங்கி உள்ளது. இவர்கள் மட்டும் இல்லாமல், சிங்கமுத்து மகன் கார்த்திக், நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் பேரன் கஜேஷ் மற்றும் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும், அவர்களுக்கு ஜோடியாக இளம் ஹீரோயின்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் அறிவிப்பு குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபாலன், “70களில் வெளிவந்த படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதி உள்ளேன். 25 ஆண்டுகால திரையுலக பயணத்தில் பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் வெளிவந்த 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' , மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன். அடுத்ததாக 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தை எடுக்க முடிவெடுத்து கவுண்டமணியை பார்த்து அவரிடம் கதையை சொன்னேன். கதை கேட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஹீரோவாக நடிக்க உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும்” என கூறியுள்ளார்.