Ilaiyaraja Biopic: இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..ஷூட்டிங் எப்போ தெரியுமா?
இசைஞானி இளையராவின் வாழ்க்கையை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார்
இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்
தமிழ் சினிமாவின் பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு அங்கீகாரங்களையும் பாராட்டுக்களையும் பெற்ற தனுஷ் தற்போது தன்னுடைய அடுத்த சாதனையாக இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பல நாள் தகவலாக வெளியான நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது.
திரைத்துறையில் உருவாகப்போகும் மெகா பட்ஜெட் படங்கள்
இதனிடையே கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தென்னிந்தியத் திரைத்துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பார்வையாளர்களைக் கவரும் வகையில், அடுத்தடுத்து உருவாக உள்ள பல மெகா பட்ஜெட் படங்களின் வரிசையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.கனெக்ட் மீடியா படங்களுக்கான ஸ்டுடியோவாக இருக்கும் .மற்றும் கனெக்ட் மீடியாவும், மெர்குரி குழுமமும் இணைந்து மக்கள் ரசனைக் குறிய திரைப்படங்களைத் தயாரிக்கும்.
மெர்குரி குரூப் இந்தியா, தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்டு, கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாக இங்குச் செயல்பட உள்ளது. புதிய ஸ்ட்ரீமிங் கதைகள் , ஒரிஜினல் கதைகள், தென் சினிமாவில் பல புதிய வகை கதைகளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்கும்.
சிறந்த வணிகத்துடன், ஆரோக்கியமான பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகளையும் ஆராயும். இந்த அற்புதமான கூட்டணி, தங்கள் முதல் திரைப்படமாக, தென்னிந்தியத் திரையுலகில் மாபெரும் சாதனையாளரான, இசை மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்க உள்ளது. இத்திரைப்படத்தில் பன்முக திறமையாளர், தென்னிந்தியாவின் நட்சத்திர நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அக்டோபர் 2024 இல் தொடங்க உள்ளது, 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்புக் கூட்டணி தென்னிந்தியத் திரைத்துறையில் பொழுதுபோக்கை உலகளாவிய தரத்துடன், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், ரசிகர்களுக்குச் சிறந்த கதைகளைக் கொண்டு வர முயற்சிக்கும்.அடுத்த பத்தாண்டுகளில் உலகளாவிய தொழில்நுட்பத்திற்கு இணையான வளர்ச்சியைத் தென்னிந்தியத் திரைத்துறையில் கொண்டு வருவதில் இந்த கூட்டணி ஒரு ஊக்கியாக செயல்படும். அடுத்த பத்தாண்டுகளில் தென்னிந்தியத் திரைத்துறையில் , குறிப்பிடத்தக்க வணிக வளர்ச்சியை இது வழங்கும். சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த நிறுவனங்களின் கூட்டணிக்குத் திரு. இளம்பரிதி கஜேந்திரன் தலைவராக செயல்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.