Dhanush : இசைஞானி இளையராஜாவாக தனுஷ்...வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வரும் நிலை இளம் வயது இளையராஜாவாக தனுஷின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
தனுஷ்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. ராயன் படம் மூன்று நாட்களில் உலகளவில் 75 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனுஷ் கரியரில் ராயன் அவருக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. ராயன் படத்திற்கு பின் இனி வரும் தனுஷ் படங்கள் வசூல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
இளையராஜாவாக தனுஷ்
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. குபேரா படத்தைத் தொடர்ந்து தனுஷ் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குபேரா படத்தின் படப்பிடிப்பிற்கு அடுத்து தனுஷ் இந்தப் படத்தில் இணைய இருக்கிறார்.
தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருப்பது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழ் மட்டுமில்லாமல் உலகளவில் குறிப்பிடத் தகுந்த இசை ஆளுமைகளில் ஒருவரான இளையராஜாவின் வாழ்க்கையை படமாக எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்றாலும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை துணிச்சலாக தனது கையில் எடுத்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குவது குறித்து பல்வேறு கேள்விகள் இருந்து வந்தாலும் இந்தப் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் எடுத்து முடிப்பதில் உறுதியாக உள்ளது படக்குழு. மேலும் இப்படத்தின் திரைக்கதையை கமல் , தனுஷ் ஆகியவர்களுடன் கலந்தாலோசித்து எழுதி வருகிறார் அருண் மாதேஸ்வரன்.
Presenting @dhanushkraja as the Maestro @ilaiyaraaja ✨🎶 #Ilaiyaraaja #Dhanush #tamil #MrD #TamilCinema pic.twitter.com/mcdS5wNWa2
— Jay (@jayprints_) July 28, 2024
இளையராஜாவாக நடிகர் தனுஷின் தோற்றம் பற்றியும் நிறைய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முன்னதாக படக்குழு சில போஸ்டர்களை வெளியிட்டிருந்தது. ஆனால் இதில் தனுஷின் முகம் காட்டப்படவில்லை. தற்போது எக்ஸ் தளத்தில் ஜே என்கிற ரசிகர்கள் இளையராஜாவின் லுக்கில் தனுஷை வைத்து சில புகைப்படங்களை உருவாக்கியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப் பட்டவை என்றாலும் தனுஷ் பார்க்க அப்படியே இளையராஜா மாதிரியே இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை கவனித்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அந்த ரசிகரை பாராட்டியுள்ளார்.