Pichaikkaran 2: பிச்சைக்காரனாக மாறிய கூல் சுரேஷ்... வைர மோதிரத்தை பிச்சை போட்ட ஹீரோயின்... கழுவி ஊற்றிய ரசிகர்கள்
பிச்சைக்காரன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் பிச்சைக்காரனாக வேடமிட்டு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பிச்சைக்காரன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் பிச்சைக்காரனாக வேடமிட்டு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
பிச்சைக்காரன் 2
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் பிச்சைக்காரன். சசி இயக்கியிருந்த இப்படத்தில் சாத்னா டைட்ஸ், தீபா ராமானுஜம், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அம்மா சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் விஜய் ஆண்டனியின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படம் தெலுங்கில் ‘பிச்சாகடு’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு விஜய் ஆண்டனிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குப் பின் “பிச்சைக்காரன் 2” படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத நிலையில், இப்படத்தில் நடிப்பு, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பரிணாமித்த விஜய் ஆண்டனியே படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த படத்தில் காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வழக்கால் தள்ளிப்போன ரிலீஸ் தேதி
இந்த படத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் ஸ்னீக் பீக் ட்ரெய்லர் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியானது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், முதலில் பிச்சைக்காரன் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது.
படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் பிச்சைக்காரன் 2 தன் ஆய்வுக்கூடம் படத்தின் கதை எனவும், இதற்காக விஜய் ஆண்டனி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூற படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி படத்தை வெளியிட அனுமதியளித்தார். மேலும் வசூல் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து மே 19 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிச்சைக்காரனாக மாறிய கூல் சுரேஷ்
அந்த வகையில் பிச்சைக்காரன் 2 படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், பாரதிராஜா, பாக்யராஜ், இயக்குனர் சசி, மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் பிச்சைக்காரன் கெட்டப்பில் வந்து அனைவரையும் அசத்தினார்.
அவருக்கு நடிகை காவ்யா தாப்பர் வைர மோதிரத்தை பிச்சைப் போட்டார். தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை காவ்யா தாப்பருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைக் கண்ட ரசிகர்கள் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரு எல்லை இல்லையா. பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இப்படியா வருவது என சரமாரியாக கூல் சுரேஷை கழுவி ஊற்றியுள்ளனர்.






















