HBD Bhagyaraj: திரைக்கதை காதலன்: தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர் பாக்யராஜ் பிறந்தநாள் இன்று..!
தன்னுடைய பலம் என்ன என்பதை நன்கு அறிந்து கொண்டு அதை வைத்தே வெற்றியை எட்டியவர் கே. பாக்யராஜ். இந்த எதார்த்த நாயகனின் 70 வது பிறந்தாநாள் இன்று
ஒரு சினிமா வெற்றி பெறுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு சரியான திரைக்கதை இல்லாமல் எந்த ஒரு திரைபடத்தலும் வெற்றி கனியை சுவைக்க முடியாது. அப்படி சினிமாவில் திரைக்கதைக்கு இருக்கும் முக்கியத்துவம் மிகவும் அதிகம். யார் வேண்டுமானாலும் கதை சொல்லலாம். ஆனால் அதை சொல்லும் போதே கேட்பவர்களை அணுவும் அசையாமல் கட்டிப்போடும் வித்தை இருக்கிறதே அது தான் கலை. அது அத்தனை எளிதில் அனைவராலும் செய்துவிட முடியாது. அப்படி ஒரு ஜாலம் செய்யும் ஜெகஜால கில்லாடி தான் நமது தமிழ் சினிமாவின் எதார்த்த நாயகன் கே. பாக்யராஜ். இன்று நம்ம ஆளு பாக்யராஜின் 71வது பிறந்தநாள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர் இந்த கலைஞன் என்றால் அவரின் பாசறையில் இருந்து வெளிவந்த பலரும் இன்று இந்த சினிமாவில் வெற்றிகரமாக கொடிநாட்டியுள்ள சிறந்த சிஷ்யர்கள். பேரும் புகழும் ஒரே நாளில் வந்துவிடவில்லை. ஏராளமான அவமானங்கள், வலி வேதனைகளை கடந்த பயணங்கள் தான் அதிகம். தனது லட்சியத்தை அடையவேண்டும் என்பதை மட்டுமே கொள்கையாக வைத்து போராடியவர் பாக்கியராஜ்.
தமிழ் சினிமாவின் புதிய விடியல் :
பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக அறிமுகமான பாக்யராஜுக்கு மட்டும் வாழ்க்கை துவங்கவில்லை அன்று முதல் தமிழ் சினிமாவிற்கே புதியதொரு விடியல் துவங்கியது. அந்த திரைப்படம் தான் இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், கவுண்டமணி என தமிழ் சினிமாவிற்கு மிக பெரிய ஜாம்பவான்களை கொடுத்த திரைப்படம்.
மைனஸ் பிளஸ்ஸானது :
இயக்குநராவதையே லட்சியமாக கொண்டிருந்த கே. பாக்யராஜ் இயக்கிய முதல் திரைப்படமான 'சுவர் இல்லாத சித்திரங்கள்' திரைப்படத்தில் வேறு வழியில்லாமல் இரண்டாவது ஹீரோவாகவும் ஆனார். அடுத்ததாக அவரின் குருநாதரின் திரைப்படமான புதிய வார்ப்புகள் மூலம் நடிகனாக புதியதொரு அவதாரமாக உருவெடுத்தார். தன்னுடைய பலம் என்ன என்பதை நன்கு அறிந்து கொண்டு அதை வைத்தே வெற்றியை எட்டியவர் கே. பாக்யராஜ். எது எல்லாம் தனது நெகட்டிவ் என சொல்லப்பட்டதோ அதையெல்லாம் பாசிட்டிவாக மாற்றி வெகுஜன மக்களின் விரும்பத்தக்க கலைஞரானார்.
நெகடிவ் டைட்டில் மூலம் நெத்தியடி :
எடுத்தது தொட்டதற்கு எல்லாம் செண்டிமெண்ட் பார்க்கும் மக்கள் மத்தியில் சற்றும் அதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் நெகடிவ் டைட்டில்களாகவே தேர்ந்தெடுத்து அதில் பாசிட்டிவ் எனர்ஜியை புகுத்தியவர். இன்றைய தலைமுறையினருக்கு பாக்யராஜ் ஒரு நடிகர் என்பது மட்டுமே தெரியும். ஆனால் முந்தைய தலைமுறையினருக்கு அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை அறிவார்கள். ஆனால் அவர் ஒரு சாலச்சிறந்த எழுத்தாளர், திரைக்கதை மன்னர் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
தன்னை தாழ்த்தி வெற்றி கண்டவர் :
கே. பாக்யராஜ் படமெடுக்கும் நேரத்தை காட்டிலும் கதையை யோசிக்கவும் திரைக்கதை எழுதவும் எடுத்துக்கொள்ளும் நேரம் தான் மிகவும் அதிகம். அப்படி ஒரு திரைக்கதை ஆசிரியரின் இடம் இன்றும் நிரப்பப்படாமல் தான் உள்ளது. தன்னை தாழ்த்தி கொண்டு வெற்றி பெற்ற இந்த மாமனிதனின் புகழும் அர்ப்பணிப்பும் இன்று போல் என்றும் இந்த சினிமா உள்ள வரை வாழும். ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே கே. பாக்யராஜ் !!!