Babloo Prithiveeraj: சினிமாவில் நிறைய தோல்விகளை பார்த்திருக்கிறேன் - நடிகர் பப்லு பிரித்விராஜ் வேதனை
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பில் இறங்கியுள்
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பில் இறங்கியுள்ளது. குவியம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்கும் புதிய படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கியுள்ளது.
பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் விதார்த், ஜனனி, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுத லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். கோவிந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் மேற்கொண்டு இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விதார்த், “ரொம்ப அற்புதமான கதை. இந்த படத்தில் நான் வியக்கும் நடிகர்கள் எல்லாரும் ஒன்றிணைந்துள்ளது மிகப்பெரிய அளவில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவு தேவை” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் பப்லு பிரித்விராஜ், “50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். நிறைய தோல்விகளை பார்த்தவன் நான். இது என்னுடைய 24 வது படம். என்னுடைய நேரம் நல்லாருக்கு என காட்டுவதற்கு அறிகுறியாக நல்ல படக்குழு அமைந்துள்ளது’.
நடிகை ஜனனி பேசும்போது, “எப்போதுமே நல்ல படம், குழு என்றால் ஆதரவு நிச்சயம் இருக்கும். அதேமாதிரி நிறைய திறமை வாய்ந்த நடிகர்கள் ஒரே படத்தில் இருப்பது நன்றாக உள்ளது. அறிமுக இயக்குநராக இருந்தாலும் கதை சொன்ன விதம் மிகப்பெரிய நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது” என தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் கிருஷ்ணா குமார் கூறும்போது, “நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம். சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து நடத்த இருக்கிறோம்” என கூறினார்.
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தொடர்ச்சியாக தேர்வு செய்து நடித்து வரும் விதார்த்துக்கு இப்படம் மற்றுமொரு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.