Ashok Selvan: அங்கு சேர்ந்ததுதான் இந்த ஜோடி.. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் காதல் மலர்ந்தது எப்போது?
விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடி முதல் முறை சந்தித்து கொண்டது எப்போது தெரியுமா?
நடிகர் அசோக் செல்வன் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொள்ளும் செய்திதான் கோலிவுட் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக். இது காதல் திருமணம் தான் என்ற செய்திகள் நேற்று முதலே இணையத்தில் வலம் வருகின்றன.
இந்நிலையில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இடையில் எப்போது காதல் மலர்ந்து என்கிற சுவாரஸ்யத் தகவல் தற்போது பரபரப்பாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
சூது கவ்வும் முதல் போர் தொழில் வரை
சூது கவ்வும் படத்தின் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். ‘தெகிடி’ படத்தின் மூலம் தனது முதல் ஹிட்டை பதிவு செய்தார்.
2020ஆம் ஆண்டு வாணி போஜன், ரித்திக்கா சிங் கதாநாயகிகளாக நடித்த ‘ஓ மை கடவுளே’ எனும் ரொமாண்டிக் காமெடி படத்தில் சமகாலத்து ட்ரெண்டிங் நடிகராக மாறினார். அசோக் செல்வனை வசூல் ஈட்டும் நடிகராக மாற்றியது சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த போர் தொழில் திரைப்படம். வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லும் ஒரு நடிகராக உருவாகி வருகிறார் அசோக் செல்வன்.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அசோக் செல்வன்
ஏற்கெனவே நடிகர் அசோக் செல்வன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாக இருந்த நிலையில் அவர் மணமுடிக்கப் போகும் அந்தப் பெண் யார் என்கிற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் பிரபல நடிகரான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் கரம்பிடிக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியது.
திருமணம் எப்போது
இந்த தகவலின் படி வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி மணப்பெண் வீட்டில் எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற இருப்பதாகவும், ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் சின்ன நிகழ்வாக இந்த திருமணத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அசோக் செல்வனின் நெருங்கிய வட்டாரத்தினர் உறுதிப்படுத்தியுள்ளார். திருமணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் வரவேற்பு விருந்து நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பின் போது மலர்ந்த காதல்
தான் காதல் கல்யாணம் தான் செய்துகொள்வேன் என்று அசோக் செல்வன் முன்னதாக தெரிவித்திருந்தார். இதனை நினைவில் வைத்திருந்த ரசிகர்கள் தற்போது இந்தத் திருமணம் காதல் கல்யாணமா, இல்லையா என்கிற கேள்வியை கேட்டு வருகிறார்கள்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில் தற்போது அசோக் செல்வன் நடித்து வருகிறார். அசோக் செல்வன் , சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் 90 களின் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது.
கதையில் என்ன ட்விஸ்ட் என்றால் இதே படத்தில் தான் கீர்த்தி பாண்டியனும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டிருக்கலாம் என்று தற்போது இணையதளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.