ABP Nadu Exclusive: ‛அந்த வலிக்கு பதில் சொல்லியே ஆகணும்..’ - இயக்குனர் சேரன் சிறப்பு பேட்டி!
என்னால அத பாத்து சிரிக்கதான் முடியும். அந்த சிரிப்பு எனக்காக சிரிக்கிறேனா இல்ல அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறேனா அப்படிங்கிறது அவங்களுக்குத் தெரியும். என்னை நம்பிவந்தவங்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றம்
நடிகர் சேரன், கெளதம் கார்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படம் வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ராஷ்மிகா ராக்கெட்’ படத்தில் எழுத்தாளராக பணியாற்றியதின் மூலம் கவனம் பெற்ற நந்தாபெரிய சாமி இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படம் தொடர்பாகவும், இன்னபிற விஷயங்கள் குறித்தும் ஏபிபி நாடு இணையதளத்திற்கு பிரேத்யமாக சேரன் பேட்டி அளித்தார். அவரிடம் நம் கேள்விகளை முன் வைத்தோம்.
கொரோனா ஊரடங்கில் நீங்கள் உணர்ந்த விஷயம் என்ன?
பணம் இருக்குறவங்க ஊரடங்க சமாளிச்சுருப்பாங்க.. ஆனா அன்றாட வாழ்கைக்கே கஷ்டப்பட்றவங்க இத எப்படி சமாளிச்சுருப்பாங்க நினைச்சு பாத்தேன். அப்ப எனக்குள்ள ஒரு பயம் வந்துச்சு..
அப்பத்தான் இங்க இருக்க ஒவ்வொரு மனுஷனுக்கு சேமிப்பு அப்படிங்கிறது எவ்வளவு அவசியம் அப்படினு தோணுச்சு. அப்படி எல்லாருக்கும் சென்றடையற மாதிரியான ஒரு திட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டு வரணும்.
இந்தப் படத்தில் நடிப்பதற்கான காரணம் என்ன?
நந்தா பெரியசாமி பத்திரிகையாளராக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு தெரியும். அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். மற்ற படி கதை சூப்பரா இருக்கு அப்படிங்கிறதுக்காகவோ, இல்ல நல்ல சம்பளம் கிடைக்கும் அப்படிங்கிறதுக்காக ஒத்துக்கல.
இன்றைய தலைமுறையினருக்கு கூட்டுக்குடும்பத்தை பற்றி தெரியல. அந்த உறவுகள் அவர்களோடு இருந்தால் என்ன நடக்கும் என்பதை இந்தப் படம் சொல்லும்.
கெளதம் கார்த்தி - கார்த்தி எப்படி பார்க்கிறீர்கள்?
கெளதம் கார்த்தி முதலில் நல்ல நடிகர். அழகா இருக்காரு.. நல்ல ஹெய்ட்டு.. அவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுடுத்து நடிச்சாரு அப்படினா நல்ல உயரத்துக்கு வருவாரு.. அதே நேரம் அவரு அவரோட அப்பாவ ஞாபகப்படுத்தாம இல்ல..
சில நேரங்கள பின்னாடி பேசிட்டு வரும் போது அவர் அப்பா பேசிட்டு வருவது போலவே இருக்கும். சில சமயங்களில் அவர் நடிப்பது கூட அவர் அப்பாவை போலவே இருக்கும். அதை தவிர்க்க முடியாது. சிவாஜி மாதிரியோ, ரஜினி மாதிரியோ, விஜய் மாதிரியோ நடிச்சாதான் தப்பு. அவர் அப்பா மாதிரி நடிச்சா அது ஜீன்.
சி2 ஹெச் முயற்சியை நீங்கள் முன்னெடுக்கும் போது அவ்வளவு எதிர்ப்புகள் வந்தன. தற்போது ஓடிடி ப்ளாட்ஃபார்ம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறதே? எப்படி பார்க்கிறீர்கள்
சிரிப்பேன்.. என்னால அத பாத்து சிரிக்கதான் முடியும். அந்த சிரிப்பு எனக்காக சிரிக்கிறேனா இல்ல அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறேனா அப்படிங்கிறது அவங்களுக்கு தெரியும். இந்த ஓடிடி அன்று என்னை நம்பிவந்தவங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். ஒவ்வொரு முறை இந்த ஓடிடி ப்ளாட்ஃபார்மை பாக்கும்போதெல்லாம் அவங்களுக்கு வலிகள்தான் வரும்.
அந்த வலிகளுக்கு யாரெல்லாம் பதில் சொல்லணுமோ, அவங்களெல்லாம் வாழ்கையில் எங்கயாவது ஒரு இடத்துல பதில் சொல்லுவாங்க.. அன்று நாங்கள் அவ்வளவு சொன்னாம்.. சினிமா இப்படித்தான் மாறப்போகுது அப்படினு.. அன்னைக்கு அதை நிராகரித்தவர்கள்தான் இன்று ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு க்யூவில் நிற்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை பார்த்து நான் சிரிச்சுட்டு போறதா இல்ல அழுகுறதா.. நான் சிரிச்சிட்டே போறேன்.
தமிழ் குடிமகன் படப் பூஜையில், அமீர் உங்களுக்கு நடித்துக்காட்டிய வீடியோ வைரல் ஆனதே?
அது இரண்டு நட்புக்குள்ள நடந்த அன்பு பரிமாறல். நான் நடிகரா இருந்தா அவர் டைரக்ட் பண்ணுவாரு. நான் டைரக்ட்டரா இருந்தா அவர் நடிப்பாரு. நாங்க இரண்டு பேரும் நடிகர்களா இருந்தா வெற்றிமாறன் டைரக்ட் பண்ணுவாரு. இதுக்கும் அமீருக்கு அந்தப் படத்தின் கதையோ, கதாபாத்திரமோ தெரியாது. அந்த இடத்தில் நடிகர் சேரனை டைரக்டர் அமீர் டைரக்ட் செய்தால் எப்படி இருக்கும் அப்படிங்கிற சின்ன விஷயம்தான். அது பாக்குறதுக்கு நல்ல இருந்துச்சு..