Maharaj: அமீர் கான் மகன் நடித்துள்ள இணைய தொடருக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் எதிர்ப்பு!
வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் மகாராஜ் தொடருக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
மகாராஜ்
பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மூத்த மகன் ஜூனைத் கான் நாயகனாக அறிமுகமாக இருக்கும் ஓடிடி சீரிஸ் மகாராஜ். சித்தார்த் பி மல்ஹோத்ரா இயக்கியுள்ள இந்தத் தொடரில் ஜெய்தீப் அஹ்லாவத், ஷர்வரி வாக் மற்றும் ஷாலினி பாண்டே உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து இந்தத் தொடரை தயாரித்துள்ளது. வரும் ஜூன் 14ஆம் தேதி நெட்ஃளிக்ஸில் இந்த தொடர் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இந்தத் தொடரை வெளியிடுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
மகாராஜ் தொடரின் உண்மைக் கதை
1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்த மிகப் பிரபலமான வழக்கு ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது மகாராஜ் தொடர். சத்யபிரகாஷ் என்கிற குஜராத்தி நாளிதழை நடத்தி வந்த கர்சாந்தாஸ் மூல்ஜீ என்பவர் இந்திய மகாராஜாக்கள் பெண்களுக்கு எதிராகவும் தங்களுக்கு சாதகமாகவும் உருவாக்கி வைத்திருந்த சட்டங்களையும் விமர்சித்து எழுதினார். மேலும், ஜதுநாத் ஜீ என்கிற இந்திய அரசரை குறிப்பிட்டு மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனைத் தொடன்ர்து ஜதுநாத்ஜீ , கர்சாந்தாஸ் மூல்ஜீ தன் மீது அவதூறு பரப்பியதாக வழக்குத் தொடர்ந்தார். பல மாதங்கள் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு கர்சாந்தாஸ் மூல்ஜீக்கு சாதகமாக அமைந்தது. இந்த வழக்கு பொதுமக்களுக்கு இடையில் ஆன்மிகத்தின் பெயரால் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது தொடர்பான பெரும் விழிப்புணர்வை உருவாகியது. இந்த நிகழ்வை வைத்தே ஜூனைத் கான் நடித்துள்ள மகாராஜ் தொடர் உருவாகியுள்ளது .
மகாராஜ் தொடருக்கு எதிர்ப்பு
இப்படியான நிலையில் மகாராஜ் தொடரை வெளிடுவதற்கு விஸ்வ இந்து பரிஹத் அமைப்பு சார்பாக எதிர்ப்பு வந்துள்ளது, இந்த அமைப்பின் இளைஞர் அணித் தலைவர் பஜ்ரங் தாள் இத்தொடரின் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளார். இந்தக் கடிதத்தில் அவர் மகாராஜ் தொடர் இந்து அரசர்களை தவறாக சித்தரித்திருப்பதாக தங்களுக்கு கேள்வி இருப்பதாகவும், மகாராஜ் தொடரை முழுவதுமாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பார்த்து ஒப்புதல் அளித்த பிறகே இந்தத் தொடரை வெளியிடவேண்டும் என்று இந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். தங்கள் அனுமதி வழங்காமல் இந்நிலையில், இத்தொடரை எங்குமே வெளியிட முடியாது என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தலைமை அலுவலகத்தின் முன் முன்னதாக கோஷமிட்டு எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளனர்.